தேனாண்டாள் ஸ்டுடியோஸ் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள ‘சங்கமித்ரா’ படத்தின் ஆரம்ப விழா, கேன்ஸ் திரைப்பட விழாவில் பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
அந்த விழாவில் ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குனர் சாபு சிரில், இயக்குனர் சுந்தர் .சி, தயாரிப்பாளர் முரளி இராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அங்கு படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. சிவப்புக் கம்பள வரவேற்பில் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடந்தனர்.
அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, சற்று முன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் ‘சங்கமித்ரா’ படத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதிஹாசனுடன் நாங்கள் தொடர்ந்து பணிபுரியப் போவதில்லை,” எனத் தெரிவித்துள்ளனர்.
இப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் ஒரு மாத காலத்திற்கும் மேலாக லண்டனில் சண்டைப் பயிற்சி, வாள் வீச்சு, குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளைப் பெற்றார்.
‘சங்கமித்ரா’ போன்ற பிரம்மிண்டமான படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.