தியேட்டர் உரிமையாளர்கள் கடந்த திங்கள் கிழமை முதல் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த தியேட்டர் ஸ்டிரைக் இன்று திரும்பப் பெறப்பட்டது. நாளை முதல் தியேட்டர்கள் வழக்கம் போல் செயல்படும்.
இன்று அமைச்சர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டது.
இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டு அவர்கள் கேளிக்கை வரி வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வார்கள்.
இந்த குழுவில் மொத்தம் 12 பேர் இருப்பார்கள். அதில் 6 பேர் தமிழக அரசு அதிகாரிகள் மீதி 6 பேர் திரைத்துறையை சார்ந்தவர்கள்.
திரைத்துறை சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், செயலாளர் கதிரேசன் , பொருளாளர் எஸ். ஆர். பிரபு, தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியன், அருள்பதி ஆகியோர் இடம் பெறுவர். இந்த குழு தமிழக அரசோடு இணைந்து டிக்கெட் கட்டணம் மற்றவற்றை முடிவு செய்யும்.
அதுவரை, தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுடன் 28 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, பெரும்பாலான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த 120 ரூபாயுடன் 28 சதவீத ஜிஎஸ்டி வரி சேர்த்து 153 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
இரு குழுக்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.