ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் ‘கௌதமி புத்ர சாதகர்ணி’.
பாலகிருஷ்ணா, ஸ்ரேயா, கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகா சுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் . நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்துள்ள படம் இது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலகிருஷ்ணா, கே.எஸ். ரவிகுமார், நடிகர் கார்த்தி, இயக்குனர் கிருஷ், இசையமைப்பாளர் பட் தயாரிப்பாளர் நரேந்திரா, வசனகர்த்தா மருதபரணி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சி.கல்யாண், காட்ரகட்டா பிரசாத், இப் படத்தின் தயாரிப்பாளர் ரகுநாத், நரேந்திரா, y.ராஜீவ் ரெட்டி, ஜகர்ல முடி சாய்பாபு, பிபோ ஸ்ரீநிவாஸ், மற்றும் கிருஷ்ணாரெட்டி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் நாட்டில் ஒரு விழா மேடையில் பாலகிருஷ்ணா கலந்து கொள்வது இதுதான் முதல் முறை.
விழாவில் நடிகர் பாலகிருஷ்ணா பேசும் போது,
“சென்னையில் இந்த விழாவில் நான் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சி. நானும் உங்களில் ஒருத்தன் தான், சென்னையில் பிறந்தவன், சென்னையில் வளர்ந்தவன். தமிழ் நாட்டு தண்ணிய குடிச்சி வளர்ந்தவன். என்னோட நூறாவது படத்திற்கு நிறைய கதைகளைக் கேட்டேன்.
புது மாதிரியாக ஏதாவது செய்யணும்னு நினைச்சுட்டு இருந்தேன். எதுவும் சரியா வரலே, டைரக்டர் கிருஷ் இந்தக் கதையைச் சொன்னார், உடனே ஒகே சொன்னேன். இது நம்மை ஆண்ட நம் மன்னனின் கதை. இந்தக் கதையை கேட்டவுடனே எங்கப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி இவங்களை நினைச்சுக்கிட்டேன். இவங்க இன்ஸ்பிரேசன் இல்லாம எந்த படங்களும் பண்ண முடியாது.
இந்தப் படத்தில் நடித்தது என்னோட பெத்தவங்க ஆசியும், பெரியவங்க ஆசியும் தான். இது இல்லாம சாதகர்ணியோட அம்மா கவுதமியோட ஆசிர்வாதமும் சாதகர்ணியின் ஆசியும் தான் இந்த படத்தில் நான் நடித்தது.
அம்மாவை பெருமைப்படுத்துங்கள், நிச்சயம் நல்லா இருப்போம். அடுத்ததா நான் கே.எஸ் ரவிகுமார் படத்திலே நடிக்கிறேன். சூட்டிங் கூட இங்க தான் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்குது. இந்த ‘கௌதமிபுத்ர சாதகர்ணி’ படத்தை குடும்பத்தோட போய் பாருங்க. தாயை பெருமைப்படுத்திய இந்த படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்,” என தமிழிலேயே பேசினார் பாலகிருஷ்ணா.
இப்படத்தின் இசையை கார்த்தி வெளியிட கே.எஸ்.ரவிகுமார் பெற்றுக் கொண்டார். விரைவில் இப்படம் வெளியாகிறது.