மருந்து உலகின் மர்மங்களைச் சொல்ல வரும் ‘ஔடதம்’

ரெட் சில்லி பிளாக் பெப்பர்ஸ் சினிமாஸ் சார்பில் நேதாஜி பிரபு தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் ‘ஔடதம்’.

பிரபல மலையாள இயக்குனர் டி.வி. சந்திரனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரமணி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசை வி. தஷி. சமைரா நாயகியாக நடிக்க, விநாயக் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் மக்களுக்கு மருந்துகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய படமாக இருக்கும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான நேதாஜி பிரபு.

ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் சினிமா மீதுள்ள ஆசையில், நடிக்க வந்திருக்கிறார். முதல் படத்தையே நல்லதொரு படமாக எடுக்க வேண்டும் என்று இந்த ‘ஔடதம்’ படத்தைத் தயாரித்து முடித்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறியதாவது,

“நாம் சாப்பிடும் மருந்துகள் ஒவ்வொன்றிலும் அது தயாரிக்கும் மூலப் பொருட்கள் மிகவும் முக்கியமானவை. அந்த மூலப் பொருட்களின் மூலக் கூறு விகிதம் என்பது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். சிலருக்கு சில மருந்துகள் அவர்களுடைய உடலுக்கு ஏற்றுக் கொள்ளாது. அவர்களுக்கு வேறு மூலக் கூறு விகிதம் கொண்ட மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

இருந்தாலும் சில மருந்து கம்பெனிகள் தடை செய்யப்பட்ட மூலப் பொருட்கள், மூலக் கூறு விகிதம் மாறுபட்ட மருந்துகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். ஏழை நாடுகளில் இம்மாதிரியான மருந்துகள் அதிகமாக விற்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் ஒவ்வொரு மருந்தின் தன்மை என்ன என்பதைப் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மருந்துகளில் உள்ள மூலப் பொருட்கள் எவையெவை என்பதை மருந்து நிறுவனங்களும் தெளிவாக விளக்க வேண்டும். இதைப் பற்றிய விஷயங்களைத்தான் கதையாக்கி இந்த ‘ஔடதம்’ படத்தைத் தயாரித்திருக்கிறோம்.

இந்த மருந்து பற்றிய மர்மங்களைக் கண்டு பிடிக்கும் நாயகனாக படத்தில் நான் நடித்துள்ளேன். இந்தப் படம் மக்களுக்கு மருந்துகள் பற்றிய ஒரு தெளிவை எடுத்துச் சொல்லும் படமாக இருக்கும். அனைவரும் பார்த்து ரசிக்கும்படியாகவும் விறுவிறுப்பாகவும் படத்தை எடுத்திருக்கிறோம்.

‘ஔடதம்’ என்றால் மருந்து என்று அர்த்தம். வித்தியாசமான பெயர் இருந்தால்தான் ரசிகர்களை ஈர்க்க முடியும், அதனால்தான் அழகான தமிழில் அப்படி ஒரு பெயரை வைத்தோம்,” என்கிறார் நேதாஜி பிரபு.

நண்பர்கள் மூலம் படத்தைப் பற்றிக் கேள்விப் பட்ட கீழக்கரை எஸ். அஜ்மல் கான், இந்தப் படத்தை சீபா அசோசியேட்ஸ் சார்பில் வெளியிடுகிறார்.

Read Previous

ஓவியா பிரச்சனை, கமல்ஹாசனை நோக்கி கோடி கண்கள்

Read Next

‘6 அத்தியாயம்’, உலக அளவில் முதல் முயற்சி

Most Popular