பலத்த சர்ச்சைகளுக்கிடையே வெளிவந்து, வெளிவந்த பின்னும் சர்ச்சைகளில் சிக்கிய ‘மெர்சல்’ படம் முதல் வார இறுதியில் சுமார் 150 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 77 கோடி ரூபாயும், கேரளாவில் 12 கோடி, கர்நாடகாவில் 10 கோடி, இதர மாநிலங்களில் 3 கோடி ரூபாயும் வசூலித்து இந்தியாவில் மட்டும் சுமார் 102 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் மலேசியாவில் 10 கோடி, அமெரிக்காவில் 8 கோடி, அரபு நாடுகளில் 8 கோடி, சிங்கப்பூரில் 5 கோடி, இலங்கையில் 3.5 கோடி, இங்கிலாந்தில் 3 கோடி மற்ற நாடுகளில் 13 கோடி மொத்தமாக 50.5 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது.
விஜய் நடித்து வெளிவந்த படங்களிலேயே குறைந்த நாட்களில் 150 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்துள்ளது. இந்த வாரம் ஆரம்பித்து நேற்றும், இன்றும் கூட தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் 75 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தியேட்டர்களுக்கு வந்துள்ளனர்.
இப்போதுள்ள வரவேற்பு நீடித்தால் இந்த வார இறுதிக்குள் ‘மெர்சல்’ படம் 200 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘எந்திரன், கபாலி’, ஆகிய படங்கள் தியேட்டர் வசூல், சாட்டிலைட் உரிமை, மற்ற உரிமைகளைச் சேர்த்து 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தன.
ஆனால், ‘மெர்சல்’ படம் தியேட்டர் வசூல் மூலமே 200 கோடி ரூபாயைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாட்டிலைட் உரிமை, மற்ற உரிமைகளைச் சேர்த்தால் 250 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது.
ஒரு படத்திற்கு தயாரிப்பாளர்கள் செய்யும் மார்க்கெட்டிங்கை விட மற்ற மார்க்கெட்டிங்கும் சேர்ந்தால் எவ்வளவு வசூலிக்கும் என்பதற்கு ‘மெர்சல்’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
குறிப்பு – வசூல் விவரங்கள் திரையுலகத்தில் உள்ள பல தரவுகளின் மூலம் திரட்டப்பட்டவை.