தமிழ்த் திரையுலகத்தில் மட்டும் அல்லது சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்பவர்கள் அஜித், விஜய் ரசிகர்கள்.
விஜய் நடித்து இந்த ஆண்டில் இரண்டு படங்கள் வெளிவந்துவிட்டன. வருடத் துவக்கத்தில் ‘பைரவா’ படம் வெளிவந்து சுமாரான வெற்றியைப் பெற்றது. கடந்த வாரம் ‘மெர்சல்’ படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
ஆனால், அஜித் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த ‘விவேகம்’ படம் தோல்வியடைந்துள்ளது. இன்று கூட சமூக வலைத்தளங்களில் ‘விவேகம்’ படத்தின் மொத்த வசூல் வெறும் 110 கோடிதான் எனத் தகவல் பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘விவேகம்’ படம் மூலம் படத்தை வாங்கியவர்களுக்கு சுமார் 30 சதவீதம் முதுல் 40 சதவீதம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் திரையுலகத்திலும் தெரிவிக்கிறார்கள்.
‘வேதாளம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவா மீண்டும் அஜித்தை வைத்து இயக்கிய படம்தான் ‘விவேகம்’. படத்தில் கமர்ஷியலான அம்சங்கள் எதுவும் இல்லாமல் ‘காதுல பூ’ வைக்கும் அம்சங்கள் நிறைய இருந்ததால் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகம் வந்தது.
அதே சமயம் விஜய் நடித்து வெளிவந்த ‘மெர்சல்’ படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சர்ச்சைகளால் படம் பரபரப்பை ஏற்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது.
‘மெர்சல்’ படத்தின் பெரிய வெற்றி அஜித் ரசிகர்களைக் கோபப்பட வைத்துள்ளது. எப்படியும் படம் 200 கோடி வசூலைத் தாண்டிவிடும் என்கிறார்கள்.
ஏற்கெனவே, ‘மெர்சல்’ டீசர் ஒரே நாளில் ‘விவேகம்’ டீசரின் சாதனையை முறியடித்த கவலையில் இருந்த அஜித் ரசிகர்கள், ‘மெர்சல்’ வசூலைக் கேள்விப்பட்டு இன்னும் கிறுகிறுத்துப் போய் உள்ளார்கள்.
அதனால், அஜித் அடுத்த படத்தை மிகவும் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும் என அஜித் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளார்கள். மீண்டும் சிவா தான் அஜித்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளிவந்தது, ஆனால் அது பற்றி இன்னும் எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை. சில அஜித் ரசிகர்களுக்கு சிவா மீண்டும் அஜித்தை இயக்கி படம் செய்வது பிடிக்கவில்லை.
தனக்காகப் படம் செய்கிறாரோ இல்லையோ தன்னைக் கொண்டாடும் ரசிகர்களுக்காகவாவது அஜித் அடுத்த படம் பற்றி ஒரு தெளிவான முடிவு எடுப்பார் என்று நம்புவோமாக.