இயக்குனர் பாலா தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் 2014ல் வெளிவந்த படம் ‘பிசாசு’. அந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரயாகா மார்ட்டின்.
அதன் பின் சில மைலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.
“தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. ‘பிசாசு’ என்ற ஒரு படத்தில் மட்டுமே தமிழில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். அதற்கு காரணமாக இருந்த மிஷ்கின் சாருக்கு நன்றி.
உண்மையை சொல்வதென்றால், இந்த வெற்றி தான் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற மொழி சினிமாக்களிலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களைத் தேர்வு செய்ய என்னை தூண்டுகிறது. இங்கு நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் என் படங்களைப் பற்றிய நிறைய அறிவிப்புகள் இருக்கும் என்று நம்புகிறேன்.
தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல், ஒன்றை மட்டும் பிரித்து சொல்வது கடினம். மிகச் சிறந்த கதைகளை சொல்வதில் இருந்து தங்களின் தனித்தன்மையை இழக்காமல், நேட்டிவிட்டியை இழக்காமல் சர்வதேச தரத்தில் சிறந்த படங்களை சிறப்பாக வழங்குவது வரை எல்லாமே சிறப்பு. இங்கே பல்வேறு தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்,” என்கிறார்.
மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘உல்டா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் பிரயாகா. அடுத்து பிருத்விராஜ் நடிக்கும் இன்னொரு மலையாள திரைப்படமான ‘பிரதர்ஸ் டே’ படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
கன்னட சினிமாவில், கணேஷ் குமார் ஜோடியாக ‘கீதா’ என்ற படத்தில் நடிக்கிறார். இது ஏற்கனவே கன்னட சினிமாவின் மிகப் பெரிய படங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.
‘பிசாசு’ படம் வந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க மீண்டும் ஆசைப்படுகிறார் பிரயாகா.