தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவர்களது உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் வினியோகஸ்தர்களுக்கான புதிய நடைமுறைகளை வகுத்துள்ளனர்.
அதன்படி மூன்று தரங்களில் நடிகர்கள் பிரிக்கப்பட்டு, ரஜினிகாந்த், அஜித், விஜய் ஆகியோரது படங்களுக்கு 60 சதவீதம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருக்கு 55 சதவீதம், மற்ற நடிகர்களுக்கு 50 சதவீதம் என முதல் வாரத்திற்கான விகிதாச்சார நடைமுறை என்றும் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் 5 சதவீதம் குறையும் விதத்திலும் அறிவித்துள்ளனர்.
பி, சி சென்டர்களில் இந்த விகிதம் கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படி சங்கத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதை உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் கமல்ஹாசன், விக்ரம், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுக்கும், அவர்களை வைத்து படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தியேட்டர்களை பராமரித்து நடத்துவதில் கடும் சிரமம் உள்ளது, அதனால் வருமானத்தை பங்கு போடுவதில் இந்த முறையை பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவர்களின் இந்த முடிவுக்கு தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் அட்ஹாக் குழுவில் இருக்கும் இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகுதான் அவர்கள் இதைப் பற்றி அறிவிப்பது முறையாக இருக்கும். இதை மீறி அவர்கள் செயல்பட்டால் மிகப் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
ஜுன் மாதம் பல புதிய படங்கள் வழக்கம் போல வெளிவர உள்ள சூழ்நிலையில் இந்த விவகாரம் புதிய சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.