‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் நடிகர்கள், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் முடிவாகிவிட்டது.
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நாயகனாக நடித்த படம் ‘லவ் டுடே’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினை 7 கோடி ரூபாய்க்கு தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூலை குவித்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்தி ரீமேக் உரிமையினையும் பெரும் விலைக்கு விற்றுவிட்டார்கள். இதில் ஆமிர்கானின் மகன் ஜுனைத் கான் மற்றும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூர் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். இதனை அத்வைத் சந்தன் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘லவ் டுடே’ இந்தி ரீமேக்கினை ஸ்ருஷ்டி பேகல் மற்றும் ஃபேண்டம் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். தற்போது படப்பிடிப்பிற்கான இடங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பினை முடித்து இந்த ஆண்டிற்குள் வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது.