ஜெயமோகனை சாடியுள்ள ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் தந்தை

எழுத்தாளர் ஜெயமோகனை கடுமையாக சாடி பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் தந்தை சதீஷ் பொடுவால்.

சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கேரளாவில் பிப்ரவரி 22-ம் தேதி வெளியானது. மலையாளத்தை விட தமிழில் வசூல் மழையை பொழிந்து வருகிறது. விரைவில் மொத்த வசூலில் 200 கோடி ரூபாயைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தினை தனது வலைப்பூ பக்கத்தில் கடுமையாக சாடியிருந்தார் எழுத்தாளர் ஜெயமோகன். இது இணையத்தில் பேசுபொருளாக மாறியது. பலரும் ஜெயமோகனை கடுமையாக சாடினார்கள். ஆனால், படக்குழுவினர் சார்பில் எந்தவொரு எதிர்ப்புமே தெரிவிக்கப்படவில்லை.

தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரத்தின் தந்தை சதீஷ் பொடுவால் தனது ஃபேஸ்புக் பதிவில் ஜெயமோகனை கடுமையாக சாடியிருக்கிறார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:

“’மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் ஆர்.எஸ்.எஸ் காரர் ஜெயமோகனை உசுப்பேத்தியதில் ஆச்சரியப்பட வேண்டாம் என்றார் நண்பர் ஜானி. ஏனென்றால் இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பெயிண்டர்கள் அல்லது மீன் வெட்டுபவர்களாக இருக்கும் சாதாரண மனிதர்களே. ஆறாம் ஆண்டவரின் குடும்ப வம்சத்தில் யாரும் இல்லை. சரங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு இடையே நல்ல நட்பைக் காட்டியவன் சிதம்பரம். இதனை ஜீரணிக்காமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. நட்பு தான் சாராம்சம். ஜெயமோகன் போற ஆர்.எஸ்.எஸ்காரர்களை தூண்டிவிட்ட சிதம்பரத்திற்கு பெரிய சல்யூட்”

இவ்வாறு சதீஷ் பொடுவால் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தின் தந்தை சதீப் பொடுவாலின் இந்தப் பதிவு இணையத்தில் பெரும் பேசும்பொருளாக உருவாகியுள்ளது.

Read Previous

10 பெண்களுக்கு தங்க நாணயம் பரிசளித்த நடிகர் ஆரி

Read Next

பிரபாஸுக்கு நாயகியாகும் மிருணாள் தாகூர்