ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்: வெளிவராத பின்னணி தகவல்கள்

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது விஜய்யின் நடிப்பில் உருவாகும் 68-வது படமாகும். விஜய்யின் 69-வது படத்தின் இயக்குநர் யார் என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

’ஆர்.ஆர்.ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஜய். ஆனால், எந்தொரு இயக்குநரையும் முடிவு செய்யாமல் இருந்தார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி, ஹெச்.வினோத், த்ரிவிக்ரம், ஆண்டனி பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் இதில் அடக்கம்.

இதில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரை மட்டும் 2-3 முறை சந்தித்துப் பேசினார் விஜய். இதனால் இருவரில் ஒருவர் தான் இயக்குநர் என்று தகவல் வெளியானது. ஆனால் கடந்த வாரத்தில் இருவரையும் அழைத்து இன்னொரு படத்தில் சந்திக்கலாம், வாழ்த்துகள் என்று கூறிவிட்டது விஜய் தரப்பு.

தற்போது டிவிவி நிறுவனம் – விஜய் இணையும் படத்தின் இயக்குநர் யார் என்பது முடிவாகிவிட்டது. ஆம், ஹெச்.வினோத் தான் இயக்கவுள்ளார். அவருடனான முதல் சந்திப்பில் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, தனுஷ் படம் இயக்கவிருப்பதால் அடுத்தகட்ட சந்திப்பு நடைபெறவே இல்லை.

தனுஷ் படத்தினை தயாரிக்கவிருந்தது ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளரும், விஜய்க்கு நெருக்கமானவருடமான லலித் குமார் தான். இதனால் அவருடம் பேசி தனுஷ் படத்தினை தள்ளிவைக்க சொல்லியிருக்கிறார்கள். அவரும் உடனடியாக தனுஷிடம் பேசி சம்மதம் வாங்கியிருக்கிறார்.

இவை அனைத்துமே 3 நாட்களில் முடித்து, கடகடவென விஜய் – ஹெச்.வினோத் கூட்டணி உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தற்போது விஜய் படத்திற்கான கதையினை இறுதிச் செய்ய பரபரப்பாக பணிபுரிந்து வருகிறார் ஹெச்.வினோத்.

’கோட்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு முன்பாக, விஜய் – ஹெச்.வினோத் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் முழுமையான திரைக்கதை வடிவத்துடன் கூடிய கதையை விஜய்யிடம் சொல்லவுள்ளார் ஹெச்.வினோத்.

Read Previous

பரபரப்பாக பணிபுரியும் தனுஷ்: திரையுலகினர் ஆச்சரியம்

Read Next

அரிமாபட்டி சக்திவேல் – விமர்சனம்

Most Popular