இனிமேல் செயல் மட்டும்தான் - சிலம்பரசன் பேச்சு
03 Jan 2021
மாதவ் மீடியா, டி கம்பெனி, எம்டிஎம் ஷர்புதீன் புரொடக்ஷன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஈஸ்வரன்’.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுசீந்திரன்,
“சிம்புவைப் பற்றி எங்களைவிட ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் அதிகமாக தெரியும். ஏனென்றால் எங்களைவிட நீங்கள்தான் அவரை அதிகமாக பின்தொடருகிறீர்கள்.
சிம்புவுடன் நான் பழகும்போது தான் தெரிந்தது. அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று. இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் என்பதில் ஐயமில்லை. இந்த வருடத்திலேயே அவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும்.
சிம்புவை வைத்து இயக்கப் போகிறேன் என்றதும் பல தயாரிப்பாளர்கள் எனக்கு போன் செய்து வேண்டாம் என்றார்கள். ஆனால், சிம்பு மற்றவர்கள் சொல்வதற்குக் காது கொடுக்காதீர்கள். என் பின்னால் நீங்கள் மட்டும் இருங்கள், படப்பிடிப்பிற்கு 9ஆம் தேதி அன்று நான் இருப்பேன் என்றார். அதேபோல், நானும் இயக்கினேன். ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியிடுகிறோம்.
இப்படத்தில் சிம்பு நடிடிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.வி.துரை. இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. நிகழ்ச்சிக்கு வர இயலாமல் சிலர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்களையெல்லாம் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கிறேன்.
நிதி அகர்வாலை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.
இப்படம் விரைந்து முடித்து வெளியாவதற்கு தயாரிப்பாளர் பாலாஜி காப்பா தான் காரணம். அவருக்கு மிகப்பெரிய நன்றி,” என்றார்.
சிம்பு பேசுகையில்,
முதலில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்த கலைஞர்கள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் இந்தப் படம் எப்படி விரைவாக முடிந்தது என்று.
‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் பாதியில் நின்றது. அந்த சமயத்தில் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்று இப்படத்தின் கதையை கூறினார் இயக்குநர். இப்படத்தின் கதையைக் கேட்டதும், கொரோனாவால் அனைவருக்கும் எதிர்மறையாக, மன உளைச்சலில் இருக்கும் சமயத்தில் இப்படத்தின் கதை நேர்மறையாக இருந்தது. ஆகையால், இப்படம் பார்க்கும் அனைவருக்கும் நேர்மறை எண்ணம் அதிகரிக்கும். அதனால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
என்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நான் ஒன்று கூற விரும்புகிறேன். அனைவரும் உங்கள் உள்ளத்தை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவரிடம் அறிவுரை கேட்பதை நிறுத்துங்கள். உங்கள் உள்ளத்தில் தான் இறைவன் இருக்கிறான். அதைத்தான் நான் செய்தேன்.
கொரோனா காரணமாக சிலர் திரையரங்கில் வெளியிடுகிறார்கள், சிலர் ஓடிடியில் வெளியிடுகிறார்கள். அது அவரவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் சினிமா என்றால் தியேட்டரில் பார்ப்பது தான் சுகம். அதனால் இப்படம் தியேட்டரில் தான் வரும்.
‘ஒஸ்தி’ படத்திற்கு தமன் இசையமைத்தார். இரவு பகலாக போனிலேயே பேசி பணியை முடித்துக் கொடுத்தார். நந்திதா ஸ்வேதா, நிதி அகர்வாலுக்கு நன்றி.
பாரதிராஜா அப்பாவை பார்க்கும்போது எனக்கு பெரிய சக்தி கிடைத்தது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இப்படத்தில் எனக்கும் பாலசரவணனுக்கும் நல்ல வைப்ரேஷன் இருக்கும்.
ஒளிப்பதிவைப் பார்க்கும்போது தெய்வீகமாக இருக்கிறது. வசனம் நன்றாக எழுதியிருக்கிறார்.
என் ரசிகர்களுக்கு ஒன்று கூற ஆசைப்படுகிறேன். இனிமேல் பேசுவதற்கு எதுவுமில்லை செயல் மட்டும் தான்.
இந்த வருடத்திலேயே 3 படங்கள் வரப்போவதாகக் கூறினார்கள். அது உண்மைதான். ‘மாநாடு, பத்து தல’, அதற்கடுத்து ஒரு படம் இருக்கிறது. சுசீந்திரன் சார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கிறேன்,” என்றார்.
இசை வெளியீட்டுப் புகைப்படங்களைப் பார்க்க....க்ளிக் செய்யவும்...
Tags: silambarasan,simbu,eeswaran, eswaran, easwaran, suseenthiran, thaman, nidhi agarwal