கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன், ரஜினிகாந்த், இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் பல சினிமா பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். குடும்பப் பாங்கான த்ரில்லர் படமாக இப்படம் இருக்கும் என்றார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து.
ரஜினிகாந்தின் இந்த 173வது படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. அவர் இப்படத்திலிருந்து திடீரென விலகினார். அதன்பின் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குவார் என்று அறிவித்தார்கள். அவர் சொன்ன கதைக்கு நீண்ட நாட்களும், வெளிநாட்டுப் படப்பிடிப்பும் தேவை என்பதால் அந்தக் கதையின் தயாரிப்பை தள்ளி வைத்துள்ளார்களாம்.
அடுத்து அஷ்வத் மாரிமுத்து சொன்ன கதை பிடித்துப் போக அதுதான் இன்று ஆரம்பமான ‘தர்மன்’.
நாளை முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.