பிக் பாஸ் 4 – எதிர்பார்ததபடி இறுதிப் போட்டியில் ஆரி வெற்றி

விஜய் டிவியில் கடந்த 2017ம் வருடம் முதல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த மூன்று சீசன்களாக ஜுன் மாதம் ஆரம்பமாகி ஒளிபரப்பான நிகழ்ச்சி, நான்காவது சீசன், கொரானோ தொற்று பரவல் காரணமாக 2020 அக்டோபர் 4ம் தேதிதான் ஆரம்பமானது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நான்காவது சீசனுக்காக ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா, சோம்சேகர், கேப்ரியலா, ஷிவானி, ஆஜித், அனிதா,  நிஷா, ரமேஷ், சனம், சம்யுக்தா, சுரேஷ், வேல்முருகன், ரேகா ஆகியோர் முதல் நாளிலிருந்தே போட்டியாளர்களாக களமிறங்கினர். அர்ச்சனா, சுசித்ரா ‘வைல்டு கார்டு என்ட்ரி’ மூலம் நுழைந்தனர்.

ஒவ்வொரு வாரமும் குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில், போட்டியில் ‘நாமினேட்’ செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளியேறினர்.

கடந்த வாரம் 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கேப்ரியலா போட்டியிலிருந்து வெளியேறினார். எனவே, இறுதிப் போட்டிக்காக ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா, சோம்சேகர் ஆகிய ஐவர் கேளத்தில் இருந்தனர்.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டி நிகழ்வில் குறைவான வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். முதலில் ரம்யா, அடுத்து சோம், பின்னர் ரியோ வீட்டை விட்டு வெளியே அழைத்து வரப்பட்டனர். கடந்த சீசன் வெற்றியாளர் முகேன் மற்ற போட்டியாளர்கள் கவின், ஷெரின் அவர்களை அழைத்து வந்தனர்.

எஞ்சிய ஆரி, பாலாஜி ஆகிய இருவரையும் கமல்ஹாசனே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று விழா மேடைக்கு அழைத்து வந்தார்.

அதன்பின் அதிக வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ஆரியை வெற்றியாளராக அறிவித்தார். வெற்றி பெற்ற ஆரிக்கு 16 கோடி வாக்குகளும், இரண்டாமிடத்தைப் பிடித்த பாலாஜிக்கு 6 கோடி வாக்குகளும் கிடைத்ததாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற ஆரிக்கு 50 லட்ச ரூபாய் பரிசுப் பணம் வழங்கப்பட்டது. இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்தே அடிக்கடி ஆரி ‘நாமினேட்’ செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த காரணத்தால் அவர் அனைத்து போட்டிகளையும் வீட்டுக்குள் அவருக்குக் கிடைத்த எதிர்ப்புகளையும் சரியாக சமாளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் எப்படியும் வெற்றி பெறுவார் என பேசப்பட்ட நிலையில் அவரே வெற்றியும் பெற்று விட்டார்.

இறுதிப் போட்டியில் இந்த சீசனின் அனைத்து போட்டியாளர்களும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர். சிலர் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டனர்.

ஐந்தாவது சீசன் முதல் மூன்று சீசன்களைப் போல ஜுன் மாதமே ஆரம்பமாகுமா அதை கமல்ஹாசனே தொகுத்து வழங்குவாரா என்பது அடுத்த சில மாதங்களில் தெரியும்.

Read Previous

ஜனவரி 16ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

ஜனவரி 18ம் தேதியில் வெளியான படம்…