ஓடிடி தளத்தில் மாபெரும் சாதனை படைத்த ‘அனிமல்’

ஓடிடி தளத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது ‘அனிமல்’ திரைப்படம்.

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வெளியான இந்தி திரைப்படம் ‘அனிமல்’. சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 3:21 மணி நேரம் ஓடிக்கூடிய படமாக வெளியானாலும், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது.

பல்வேறு பிரபலங்களும் இந்தப் படத்தினை கடுமையாக சாடினார்கள். பெண்களை சித்திரித்த விதம், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் என கடும் விமர்சனங்களையும் ‘அனிமல்’ சந்தித்தது. அனைத்தையும் கடந்து சுமார் 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே வசூல் செய்தது.

ஜனவரி 26-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது ‘அனிமல்’. அங்கும் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ஜனவரி 26-ம் தேதி முதல் இப்போது வரை தொடர்ச்சியாக இந்தியாவின் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது ‘அனிமல்’.

ஓடிடி தளத்தில் முதல் வாரத்தில் 6.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது ‘அனிமல்’ திரைப்படம். ஷாருக்கானின் ‘டங்கி’ மற்றும் பிரபாஸின் ‘சலார்’ ஆகிய படங்களின் பார்வைகளை பல மடங்கு பின்னுக்கு தள்ளியது. தொடர்ச்சியாக 2-வாரத்தில் 5.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது ‘அனிமல்’ திரைப்படம்.

இந்தியாவில் 6 வாரங்களாக முதல் 10 இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது ‘அனிமல்’. அதோடு மட்டுமன்றி முதல் வாரத்தில் 6 நாடுகளில் முதல் 10 இடங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. மேலும் 2-வது வாரத்தில் 17 நாடுகளில் முதல் 10 இடங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

இந்தச் சாதனையினால் சந்தீப் ரெட்டி வாங்காவின் அடுத்தப் படமான ‘ஸ்பிரிட்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதில் நாயகனாக பிரபாஸ் நடிக்கவுள்ளார்.

Read Previous

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே – விமர்சனம்

Read Next

பரபரப்பாக பணிபுரியும் தனுஷ்: திரையுலகினர் ஆச்சரியம்

Most Popular