ஜாவத் அக்தருக்கு ‘அனிமல்’ படக்குழுவினர் அளித்துள்ள பதிலால் இந்தி திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’. மாபெரும் வசூல் சாதனையை இந்தப் படம் நிகழ்த்தினாலும், சமூக வலைதளத்தில் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.
பல்வேறு முன்னணி திரையுலகினர் கூட இந்தப் படத்துக்கு எதிராக தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். இதனிடையே இந்தி திரையுலகின் முன்னணி கதாசிரியர் மற்றும் பாடலாசிரியருமான ஜாவத் அக்தரும் ‘அனிமல்’ படத்திற்கு எதிராக தன்னுடைய கருத்துகளை பதிவு செய்திருந்தார்.
அதில் “ஒரு பெண்ணிடம் ஆண் ஒருவர் தனது ஷூவை நாக்கால் துடைக்க சொல்வதும், அந்தப் பெண்ணை அடிப்பது சரியென சொல்வதுமான காட்சியமைப்பு கொண்ட படத்தை மக்கள் சூப்பர் ஹிட்டாக்குவது ஆபத்தானது.
தற்போதைய காலக்கட்டத்தில் படத்தின் இயக்குநர்களைக் காட்டிலும், பார்வையாளர்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.பார்வையாளர்கள் தான, எதைப் பார்க்க வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இன்று சில இயக்குநர்கள் மட்டுமே நல்ல சினிமாவை படமாக்குகிறார்கள்.” என்று தன் பேச்சில் குறிப்பிட்டு இருந்தார் ஜாவத் அக்தர். ஆனால் ‘அனிமல்’ படத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை.ஜாவத் அக்தரின் கருத்து பரவலாக பேசப்பொருளாக ஆனது.
இதற்கு எதிர் கருத்து தெரிவிக்கும் வகையில் ‘அனிமல்’ படக்குழுவினர் தங்களது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் “காதலின் (ஜோயாவிற்கும் ரன்விஜய்க்கும் இடையே) செய்யும் துரோகத்தை உங்களைப் போன்ற ஒரு பெரிய ஆளுமை கொண்ட எழுத்தாளரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் உங்கள் கலை வடிவங்கள் அனைத்தும் பெரிய பொய்யே.
இதுவே ஒரு பெண் காதல் என்ற பெயரில் ஒரு ஆனால் ஏமாற்றப்பட்டு, துரோகத்துக்கு ஆளாகி, அந்தப் பெண் அந்த ஆணிடம் தன் ஷுவை நாக்கால் சுத்தம் செய்யச் சொல்லியிருந்தால், அதை பெண்ணியம் என்று சொல்லி கொண்டாடியிருப்பீர்கள்.
பாலின அரசியலில் இருந்து காதல் விடுபடட்டும். அவர்களை காதலர்கள் என்று மட்டும் அழைப்போம். காதல் செய்த ஒருவர் ஏமாற்றி பொய் சொன்னார். காதல் செய்தவர் என் ஷூவை நக்கு என்றார். அவ்வளவே” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
‘அனிமல்’ படக்குழுவினரின் இந்த கருத்து இந்தி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு முன்னணி பாடலாசிரியருக்கு இந்த மாதிரியான பதில் தவறானது என்று பலரும் ‘அனிமல்’ படக்குழுவினரை கடுமையாக சாடி வருகிறார்கள்.