அடில் ஹுசைன் தொடர்பாக கடுமையான எதிர்கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா.
‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘அனிமல்’ படங்கள் மூலம் இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சந்தீப் ரெட்டி வாங்கா. இதில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தினை இந்தியில் ஷாகித் கபூரை வைத்து ‘கபீர் சிங்’ என்ற பெயரில் இயக்கி இருந்தார். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதில் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தா அடில் ஹுசைன். ’கபீர் சிங்’ படத்தில் நடித்தது தொடர்பாக அடில் ஹுசைன் அளித்த பேட்டியொன்றில் “’கபீர் சிங்’ படத்தில் எனது காட்சிகளை மட்டுமே கேட்டு பிடித்திருந்ததால் நடித்தேன். முழுக்கதையினை கேட்டிருந்தால் நடித்திருக்க மாட்டேன்.
அந்த மாதிரியான ஆணாதிக்க கதையில் நடித்ததிற்கு வருத்தப்படுகிறேன். ‘கபீர் சிங்’ படத்தினை திரையரங்கில் பார்த்த போது பாதியிலேயே வெளியேறிவிட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர்கருத்து தெரிவிக்கும் வகையில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தனது எக்ஸ் தளத்தில், “30 கலைப் படங்களில் உங்கள் ‘நம்பிக்கை’ ஒரு BLOCKBUSTER படத்தின் மீதான உங்கள் ‘வருந்தம்’ அளவுக்கு உங்களுக்குப் புகழைத் தரவில்லை. உங்களை நடிக்க வைத்ததற்கு வருந்துகிறேன்.
இப்போது AI உதவியுடன் உங்கள் முகத்தை மாற்றுவதன் மூலம் உங்களை அவமானத்திலிருந்து காப்பாற்றுவேன். இப்போது சரியாகச் சிரிக்கவும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நடிகரின் கருத்துக்கு இந்தளவுக்கு கோபத்துடன் ட்வீட் செய்ததிற்கு பலரும் சந்தீப் ரெட்டி வாங்காவை திட்டி தீர்த்து வருகிறார்கள். அதே வேளையில், ஒரு சிலர் அவருடைய கருத்து சரி என்றும் கூறி வருகிறார்கள்.