ஏ அன்ட் பி குரூப்ஸ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில், ஜாவித் ரியாஸ் இசையமைப்பில், அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’.
அப்பா – மகள் வாழ்வியலைச் சொல்லும் கதையில் நிஜ அப்பா – மகள் நடித்தால் எப்படியிருக்கும்…? அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை அனைத்துமே இன்னும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். எனவேதான் நிஜ வாழ்வில் அப்பா, மகளாக இருக்கும் அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் இருவரும் இந்தக் கதையில் அப்பா-மகள் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது படக்குழு.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. இதில் ஹப் மற்றும் ப்ரீஸர் செட்கள் போடப்பட்டு சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
'அன்பிற்கினியாள்' படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியனின் நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும் என்கிறார் இயக்குநர் கோகுல். ஏனென்றால், சில முக்கிய காட்சிகளில் தனது உடலசைவுகள் மற்றும் கண்கள் மூலமாகவே பேசியிருக்கிறார். மேலும், ப்ரீஸர் அரங்குகளில் கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அப்போது -11 டிகிரி, -12 டிகிரி குளிரிலும் அசராது நடித்துப் படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். நீண்ட வருடங்கள் கழித்து நடிப்பிற்கத் திரும்பியுள்ள அருண் பாண்டியனின் நடிப்பு பார்வையாளர்களைப் பேசவைக்கும் என்கிறது படக்குழு.
‘மாநகரம்’ படத்திற்குப் பின்னணி இசை அமைத்த ஜாவித் ரியாஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் லலிதானந்த் எபதியிருக்கிறார்.
இந்தப் படம் அப்பா – மகள் உறவை மையப்படுத்திய த்ரில்லராக இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு என்பது அசாத்தியமானது. பார்வையாளர்களுக்குத் திரையில் ஒரு நல்ல எமோஷனலான த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது. கோடை விடுமுறைக்குத் திரைக்கு வரவுள்ளது.
அன்பிற்கினியாள் படக்குழுவினர் விவரம்:
திரைக்கதை, இயக்கம் – கோகுல்
தயாரிப்பு – அருண் பாண்டியன்
ஒளிப்பதிவாளர் – மகேஷ் முத்துசுவாமி
இசையமைப்பாளர் – ஜாவித் ரியாஸ்
எடிட்டர் – பிரதீப் ஈ.ராகவ்
கலை இயக்குநர் – ஜெய்சங்கர்
வசனம் – கோகுல், ஜான் மகேந்திரன்
சண்டை இயக்குநர் – பிசி
பி.ஆர்.ஓ – யுவராஜ்