குணாஸ் என்டர்டெயின்மென்ட் சாய் கார்த்திக் வழங்கும் மஹிந்திரா பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வி.ஸ்ரீனிவாச ராவ் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.
சைதன்யா கதாநாயகனாக , ரித்திகா கதாநாயகியாக நடிக்கிறார்கள். இந்த படத்தின் தொடக்க விழா, பூஜை நிகழ்ச்சிக்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் நடிகர் ஆகாஷ் பூரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் காட்சிக்கு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
பின்னர் நடந்தத பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குனர் சின்ன வெங்கடேஷ் பேசுகையில், "நான் சொன்ன கதை பிடித்ததால் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார் தயாரிப்பாளர் வி.சீனிவாச ராவ். அவருக்கு என் நன்றிகள். ஹீரோ ஆகாஷ் பூரி, தயாரிப்பாளர் வி. ராவ் வந்து எங்களை வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருந்தாலும் காதல், குடும்பம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான அம்சங்களும் உண்டு. பல முன்னணி தமிழ் நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள். இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறும்," என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் வி.சீனிவாச ராவ் பேசுகையில், "இது என்னுடைய முதல் படம். இயக்குனர் சின்ன வெங்கடேஷ் சொன்ன கதை எனக்குப் பிடித்ததால் மஹிந்திரா பிக்சர்ஸ் பேனரில் இப்படத்தைத் தயாரிக்கிறேன். அனைத்து ரசிகர்களும் விரும்பும் அனைத்து அம்சங்களுடன் இப்படம் எங்கள் பேனருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என நம்புகிறேன்," என்றார்.
படத்தின் நாயகன் சைதன்யா பேசுகையில், "இது எனது மூன்றாவது படம். எனது முதல் படத்திலிருந்தே வெங்கடேஷைத் தெரியும். இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நல்ல டீம் மற்றும் நல்ல கதையுடன் உருவாகி வரும் இப்படம் கண்டிப்பாக அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும்," என்றார்.
படத்தின் நாயகி ரித்திகா சக்ரவர்த்தி பேசுகையில், "போம்ம அதிரிந்தி திம்ம திரிகிந்தி" படம் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதையடுத்து, விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ மற்றும், 'ஆனந்தா' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறேன். இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி," என்றார்.
இசையமைப்பாளர் ஸ்வரூப்-ஹர்ஷா பேசுகையில், "இந்தப் படத்திற்கு அருமையான மெலடி பாடல்களை நல்ல வரிகளுடன் வழங்க உள்ளோம். இவ்வளவு நல்ல படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி," என்றார்.