தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸ் இல்லையா ?

கொரானோ ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களாக தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன.

தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின்படி நாளை நவம்பர் 10 முதல் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன.

அடுத்த நான்கு நாட்களுக்குள் தீபாவளி வர உள்ளது. ஆனால், தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையே விபிஎப் கட்டணப் பிரச்சினையின் காரணமாக புதிய படங்கள் வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

டிஜிட்டல் முறையில் தியேட்டர்களில் படங்களைத் திரையிட டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனமும், தியேட்டர்காரர்களும் தயாரிப்பாளர்களிடமிருந்து பெறும் கட்டணம்தான் விபிஎப்.

தற்போது வாங்கப்படும் விதத்தில் கட்ட மாட்டோம், அந்தக் கட்டணத்தை நியாயமான அளவில் விபிஎப் நிறுவனத்திற்கு மட்டும்தான் கட்டுவோம் என தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

அது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால், இந்த வருட தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாக முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இது குறித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தற்போது விபிஎப் சம்பந்தமாக அனைத்து தரப்புகளின் நிலைப்பாட்டின் காரணமாக புது திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் சமீபத்தில் மதிப்பிற்குரிய அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த காலகட்டத்தை கருத்தில் கொண்டு ஒரு வருட காலத்திற்கு தற்காலிக தீர்வு ஒன்றை எங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கி முன் வைத்தோம். எனினும் பல கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தியும் சுமூகமான தீர்வு எட்டப்படாததால் மீண்டும் தயாரிப்பாளர்களோடு கலந்தாலோசித்ததில், நல்ல தீர்வு ஏற்படும் வரை புது படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதே சமயம், விபிஎப் கட்டணத்தை பழையபடியே செலுத்தி படங்களைத் திரையிட சில தயாரிப்பாளர்கள் முயன்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

Read Previous

சித்த மருத்துவர் பாதுகாப்புடன் மீண்டும் ஆரம்பமான ‘மாநாடு’

Read Next

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணிகளில் மாற்றம்

Most Popular