இருவர் ஒன்றானால் – விமர்சனம்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சில படங்களுக்குச் செல்வோம், அப்படிப்பட்ட சமயங்களில் சில படங்கள் நம்மை கவர்ந்து விடும். அம்மாதிரியான ஒரு படம்தான் ‘இருவர் ஒன்றானால்’.

இதுவும் ஒரு காதல் படம்தான், ஆனால் வித்தியாசமான காதல் படம். இடைவேளை வரை படத்தின் நாயகனுக்கு காதல் வரவே வராது. அவர் மீதுதான் சில பல பெண்களுக்குக் காதல். இடைவேளை சமயத்தில் அவருக்கு வரும் காதலில் அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதைத்தான் அறிமுக இயக்குனர் அன்பு.ஜி சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்.

பி.ஆர்.பிரபு கல்லூரியில் படிக்கும் மாணவர். அவர் பள்ளியில் படித்த காலத்திலிருந்து கல்லூரிக்கு வந்தது வரை இரண்டு மூன்று பெண்கள் அவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், யாரிடத்திலும் எனக்கு அப்படி ஒரு எண்ணமே தோன்றவில்லை என மறுத்து விடுகிறார். அப்படிப்பட்டவர் மனதிலும் காதலை விதைக்கிறார் படத்தின் நாயகியான கார்த்திகா மாலினி. இவரைப் பார்த்ததிலிருந்து காதல் பித்து பிடித்துப் போகிறது பிரபுவுக்கு. ஆனால், மாலினிக்கு பிரபு மீது காதல் வரவேயில்லை. அப்புறம் இவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் பிரபு. அந்த வயதில் அழகான பெண்களைப் பார்த்தாலே காதலிக்கத் தோணும், ஆனால் அவரைத் தேடி வந்து பெண்கள் காதலைச் சொன்னால் கூட ஒதுங்கிப் போகிறார். அட, இந்தக் காலத்தில் இப்படி ஒருவரா என ஆச்சரியப்பட வைக்கும் ஒரு கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்திருக்கிறார் பிரபு. மாலினியைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு அவரை விடாமல் துரத்தித் துரத்திக் காதலிப்பதிலும் கவர்ந்து விடுகிறார்.

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் கிருத்திகா மாலினி, உண்மையிலேயே பிரபுவின் நிஜமான காதலி. இப்போது இருவரும் கணவன், மனைவியாக இருக்கிறார்கள். இதுதான் படத்தின் ஹைலைட்டே. பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கிறார் மாலினி. இடைவேளைக்குப் பிறகுதான் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு, அதிலும் தன்னைத் துரத்தும் பிரபுவை முறைப்பதிலேயே அவருடைய மொத்த நடிப்பும் போய்விடுகிறது.

கிருத்திகா மாலினியை விட பிரபுவைக் காதலிக்கும் பெண்களாக வரும் அந்த ஹோம்லி பெண் கார்த்திகா மேனும், பள்ளியில் படிக்கும் போது காதலிக்கும் தீக்ஷிதாவும், மூன்றாவது காதலியாக வரும் ஷைலேந்திரியும் அழகாகத் தெரிகிறார்கள்.

குரு கிருஷ்ணன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான், இம்மாதிரியான படங்களில் பாடல்கள் முதல் முறை கேட்பதிலேயே ஹிட் ரகமாக இருக்க வேண்டும்.

பிரபுவைக் காதலிக்கும் முதல் மூன்று பெண்களின் காதல் கதையில் இருக்கும் சுவாரசியமும், சம்பவங்களும், பிரபு காதலிக்க ஆரம்பித்த பிறகு இல்லாமல் போவது படத்தில் குறையாக உள்ளது. அதிலும் இன்னும் சுவாரசியத்தைக் கூட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி, பேய்ப் படங்களையே பார்த்து கொஞ்சம் காதலை மறந்து போயிருப்பவர்களுக்கு இந்த ‘இருவர் ஒன்றானால்’ நிச்சயம் சுவாரசியமான படத்தைப் பார்த்த திருப்தியைத் தரும்.

இருவர் ஒன்றானால் – நண்பர்களுடன் கூட்டமாகப் போய்ப் பார்க்கலாம்.

Read Previous

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வில் புதிதாக ப்ரியா ஆனந்த்…

Read Next

Dummy Tappasu – Official Trailer