பிரமிக்க வைக்கும் ‘பாகுபலி’

‘நான் ஈ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகுபலி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நாயகன் பிரபாஸ், வில்லன் ராணா டகுபதி, நாயகிகள் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், படத் தயாரிப்பாளர் ஷோபு, தமிழில் படத்தை வெளியிடும் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, வசனம், பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழில் தெள்ளத் தெளிவாகப் பேசிய ராஜமௌலி கூறியதாவது,

“இந்த மாதிரி படம் பண்றது பல இயக்குனர்களுக்கு ஒரு கனவு மாதிரி. இந்தப் படம் எனக்கு கனவு கிடையாது, நான் இந்த உலகத்துலதான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். எங்க அப்பா என்னை லைப்ரரில சேர்த்த போது, நான் அதிகமா படிச்சது அமர் சித்ரா கதைகளைத்தான். அந்த வயசுல எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது. ஸ்கூலுக்குப் போயி அந்தக் கதைகளைச் சொல்வேன். ஆனால், நான் இயக்குனரானதும், அந்த மாதிரி கதையைப் போய் தயாரிப்பாளர்கள் கிட்ட சொன்னால், வெளிய போடான்னு சொல்வாங்க. அந்த மாதிரி கதைகள் எல்லாம் நம்ம கதைகள்தான். ராஜா ராணி பற்றி, கோட்டைகள் வச்சி கதை எடுக்கணும்னு ஆசை.

இதுக்கு முன்னாடி என்னோட சில படங்கள்ல 5,6வது படத்துல 20 நிமிஷம், 40 நிமிஷம்னு சரித்திரிக் கதைகளைப் பண்ணன். அந்தப் படங்கள் வெற்றியடைஞ்சதும் தயாரிப்பாளர்களுக்கு அந்த மாதிரி படம் எடுத்தால் மக்கள் பார்ப்பாங்க, நாம போடற பணம் திரும்ப வரும்னு நினைச்சாங்க. ஆக, இந்தப் படத்தை நான் என்னோட முதல் வகுப்பு படிக்கும் போதே என் மனசுல பிரமிக்க வச்ச ஒரு விஷயம்.

இந்தப் படத்துல எவ்வளவு பேர் உழைச்சிருக்காங்கன்னு எண்ணிக்கையில சொல்ல முடியாது. ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டுமே 2000 பாடி பில்டர்களைப் பயன்படுத்தியிருக்கேன். அவங்களுக்கு மேக்கப் போட்டு, விக் வச்சி, அவங்க கையில கத்தியைக் கொடுத்து வந்து நிறுத்துறதுக்கே அவ்வளவு நேரமாகிடும். படத்துக்காக 1000 மீட்டர் நீளத்துக்குக் கூட ப்ளூ-மேட் இருக்கும். இந்தப் படம் ஒரு படமா இல்லாம ஒரு தொழிற்சாலை மாதிரிதான் நடந்தது. இப்ப யோசிச்சிப் பார்த்தால், எப்படி அப்ப எடுத்தோம்னு ஆச்சரியமா இருக்கு. இந்தப் படத்துல இந்தியாவோட டாப் டெக்னீசியன்கள் உழைச்சிருக்காங்க,” என படத்தைப் பற்றி பெருமிதத்துடன் பேசினார் ராஜமௌலி.

நடிகர் சூர்யா படத்தின் டிரைலரை வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்.

இந்தப் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Read Previous

ஜுன் 16-ல் ‘ரஜினி முருகன்’ இசை வெளியீடு…

Read Next

காக்கா முட்டை – விமர்சனம்