சோதனைகளை சந்தித்தால்தான் சாதனை – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து வெளிவர உள்ள ‘ரஜினி முருகன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், ‘சோதனைகளை சந்தித்தால்தான் சாதனை’ என்று ரஜினிகாந்த் சொன்னதை மனதில் வைத்துத்தான் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன் என்று பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது,

“இது என் எட்டாவது படம். இந்த தலைப்பு பற்றி பலரும் கேட்டார்கள், எதுக்கு இவனுக்கு இந்த வேண்டாத வேலை, இவனுக்கு என்னாச்சு என்பார்களே என்று முதலில் பயந்தேன்.

‘ரஜினி முருகன்’ கதையைக் கேளுங்கர் என்றார் இயக்குனர் பொன்ராம். எனக்கு இரண்டே கேள்விகள் இருந்தன. ஏன் இந்தத் தலைப்பு ? இதை எப்படி ஏற்றுக் கொள்ளும்படி செய்யப் போகிறார் ? என்று எனக்குள் இரண்டு கேள்விகள் இருந்தன. ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும் 20 நிமிஷத்தில் இந்தப் படத்திற்கான தலைப்பை சரியாகத் தான் வைத்திருக்கிறார் எனப் புரிந்து கொண்டேன்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துக்குப் பிறகு அடுத்த படம் என்பதில் எனக்கு கொஞ்சம் பதற்றமும் மன அழுத்தமும் இருந்தது. ஆனால் பொன்ராம் படத்தை எப்படி திரையரங்கில் ரசிப்பார்கள் என்று நினைத்து மட்டுமே படத்தை எடுத்தார். அப்படித்தான் ஒவ்வொரு காட்சியையும் எடுப்பார். சூரி அண்ணனிடம் பேசிய போது இருவருக்கும் நடிப்பில் சிரிக்க வைக்க வாய்ப்பு இருக்கிறது என்று பகிர்ந்து கொண்டோம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு, ஒரே மாதிரி இருக்குமா என்றெல்லாம் கேள்விகள் வந்தன. அதில் வேலைக்கே போகமாட்டேன் என்றிருக்கும் கதாபாத்திரம், இந்தப் படத்தில் வேலைக்குப் போக வேண்டும் என்று நினைக்கிற கதாபாத்திரம்.

அதில் என் குடும்பம் பற்றி பெரியதாக எதுவும் இருக்காது, இதில் நிறைய இருக்கும். இந்தப் படத்தில் பெரிய புதிய முயற்சிகள் எல்லாம் எடுக்கவில்லை. ஜாலியாக சிரித்து விட்டு போக நாங்கள் உத்திரவாதம். படம் பார்த்தோம் ஜாலியாக இருந்தது என்று சொன்னால், அதுதான் எங்களுக்கு ஆஸ்கார் விருது.

இதில் நடிக்க ராஜ்கிரண்சார் ஒப்புக் கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. கதை பிடித்து ஒப்புக் கொண்டார். அவர் எவ்வளவு பெரிய நடிகர். அவர் கூட நான் நடிக்கிற மாதிரி காட்சி இருக்கிறதோ இல்லையோ எனக்கு பெருமையாக இருக்கட்டும் என்று நான் அவருடன் நடந்து வருகிற மாதிரி ஒரு காட்சியை படமெடுத்து தரும்படி கேட்டேன். எடுத்த அந்தக் காட்சியையும் இப்போது படத்தில் சேர்த்து விட்டார்கள்.

ராஜ்கிரண்சார் ஏழுநிமிட காட்சியை ஒரே டேக்கில் நடித்து அசத்தி எல்லாரையும் கலங்க வைத்துவிட்டார். சமுத்திரக்கனி சார் இந்தப் படத்தில் அமைதியாக இருந்து நரித்தனம் செய்கிற வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் 4 பக்க வசனம் எழுதித் தந்தால் நாங்கள் 10 பக்கம் பேசுவோம். கடைசியில் இயக்குநர் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வார். ‘வருத்தப் படாத வாலிபர் சங்கம் ‘ படமே மூன்றரை மணிநேரம் இருந்தது, அப்புறம்தான் இயக்குநர் படத்தின் நீளத்தைக் குறைத்தார்.

தமிழ் பேசத் தெரிந்த படிக்கத்தெரிந்த அழகான கதாநாயகி கீர்த்தி சுரேஷ். இன்னும் நல்ல உயரமான இடத்திற்குப் போவார்.

இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போது, பலரும் கேட்டார்கள் ஏன் இந்தப் பேனரில் செய்கிறாய் என்று. அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்றனர். எல்லாருக்கும்தான் பிரச்சினை இருக்கிறது. நாம் படம் எடுத்தோம், ஓட வேண்டும் ஜெயிக்க வேண்டும் என்பதை விட அது கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்குக் கூட நிற்கிற மாதிரி இருந்தால் அது மகிழ்ச்சிதானே?.

படம் வரும் போகும், ஓடும் ஓடாது. ஆனால் மனுஷனாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன், அதனால் இப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். சோதனையை சந்தித்தால்தான் சாதனை, என்று ரஜினி சார் சொன்னதை நினைத்துக் கொண்டு இந்தப் படத்தில் நடித்தேன்,” என சிவகார்த்திகேயன் பேசினார்.

Read Previous

50 பேய்களுடன் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி சண்டை…

Read Next

சொப்பன வாழ்வில் – ஒய்.ஜி.எம்.மின் புதிய நாடகம்