‘விகடகவி’ என்ற படத்தின் மூலம் அமலா பாலை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் கிருஷ்ணன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘குரங்கு கைல பூ மாலை’.
சாய் அமீர் புரொடக்சன்ஸ் சார்பாக அமீர் ஜான் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் குருநாத் இசையமைத்துள்ளார்.
படத்தில் இடம் பெற்றுள்ள நான்கு முக்கிய கதாபாத்திரங்களில் ஜெகதீஷ், கௌதம் கிருஷ்ணா, பிரவீண் குமார், கணேஷ் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். படத்தின் நாயகியாக ‘கோலி சோடா’ படத்தில் நடித்த சாந்தினி நடிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது,
“தான் உயிராக நினைத்த காதலி தன்னை ஏமாற்றியதால், மனம் போன போக்கில், வாழும் ஒருவன், தன் வலையில் சிக்கும் எல்லாப் பெண்களையும் காதலிப்பது போல் நடித்து தன் ஆசைக்கு இணங்க வைக்கிறான்.
ஒரே பெண்ணை தீவிரமாகக் காதலித்து அவளையே திருமணம் செய்ய நினைக்கிறான் மற்றொருவன்.
தன் முறைப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என அடாவடியாக இருக்கிறான் இன்னொருவன்.
தனக்கு திருமணமே வேண்டாம். டைம் பாஸுக்காக தினமும் புதுப் புதுப் பெண்கள் வேண்டும் என்று தேடி அலைகிறான் நான்காமவன்.
இந்த நான்கு பேர்களுக்கிடையில் ஒரே ஒரு பெண் சிக்கித் தவிக்கிறாள். அவள்தான் இந்தப் படத்தின் கதாநாயகி. இப்படிப்பட்டவர்களிடம் ஒரு பெண் சிக்கினால் என்ன ஆகும் என்பதைத்தான் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம்.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வரும் அனைத்து கதாபாத்திரங்களும், அதாவது 25 கதாபாத்திரங்களும் கடைசியாக கிளைமாக்ஸ் காட்சியில் மொத்தமாக இடம் பெறும் அளவிற்கு கிளைமாக்சை உருவாக்கியிருக்கிறோம்.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் இடைவேளை வரை பார்த்துவிட்டு ‘ஏ’ சர்டிபிகேட்தான் தரலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், படத்தை முடித்திருக்கும் விதத்தைப் பார்த்ததும் ‘யு’ சர்டிபிகேட் தர தீர்மானித்தோம். அந்த அளவிற்கு இன்றைக்குத் தேவையான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறீர்கள் எனப் பாராட்டினார்கள்.
இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும், படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்கள் புதுமுகம் என்றாலும் படத்தைப் பற்றிப் பேச வைக்கும். அந்த அளவிற்கு எங்களுக்கு நம்பிக்கை உண்டு,” என்கிறார் இயக்குனர் கிருஷ்ணன்.