‘தனி ஒருவன்’ படம்தான் தமிழ் சினிமாவில் கடைசியாக ஃபிலிமில் படமாக்கப்பட்ட கடைசி படம். அந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் பிரபல ஒளிப்பதிவாளரான ராம்ஜி.
இதற்கு முன் “இரண்டாம் உலகம், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், பருத்தி வீரன், ராம், மௌனம் பேசியதே, டும் டும் டும், வள்ளல்” உள்ளிட்ட தமிழ்ப் படங்களுக்கும், சில ஹிந்தி, ஒரு மலையாளப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தன்னுடைய திரையுலகப் பயணத்தைப் பற்றி அவர் கூறியதாவது,
“தனி ஒருவன்’ படத்தை ஃபிலிமில்தான் படமெடுக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். ஃபிலிமுல படமாக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல ஸ்டாக் கிடைக்காமப் போயிடுச்சி. இந்தப் படத்துக்காக லேப்-ல சில ஸ்டாக்ஸ் வச்சிருந்தாங்க. அப்புறமா கடைசி நேரத்துல ஒரு 5 சதவீதம் டிஜிட்டல்லதான் படமாக்கினேன். இப்ப ஃபிலிம்ல படத்தைப் பார்த்த பலரும் பாராட்டுத் தெரிவிக்கிறாங்க.
ராஜா கூட இதுக்கு முன்னாடியே சில படங்கள் பண்ண வேண்டியது. ஆனால், சந்தர்ப்பம் அமையலை. இந்தப் படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவு பண்ணணும்னு வந்து, கதை சொன்னாரு, அருமையா இருந்தது. அப்புறம்தான் இந்தப் படத்தைப் பண்ண ஒத்துக்கிட்டேன். ஒரு அற்புதமான இயக்குனர் அவர்.
படத்துல ராஜா கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்காரு. படத்துல ரவியோட பிரத்யேக அறையா காட்டியிருக்கிற இடத்துல தொங்க விட்டிருக்கிற செய்திகள் எல்லாமே, உண்மையான பத்திரிகை செய்திகள். அதெல்லாம் எங்க தெரியப் போகுதுன்னு அவர் விட்டுடலை. அப்படி காட்சிக்குக் காட்சி பல டீடெய்ல் பண்ணியிருக்காரு.
படத்துல நம்மளோட உழை ப்பைப் பாராட்டும் போதுதான் நமக்கு மகிழ்ச்சி வரும். ஆனால், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தைப் பார்த்துட்டு யாருமே பாராட்டலை. அந்தப் படத்துக்காகப் பல விஷயங்களை பண்ணியிருந்தோம்.
நான் வருஷத்துக்கு ஒரு முறைதான் படம் பண்ணணும்னு இருந்தேன். அதே மாதிரி ஒரு இயக்குனரோட மூணு படம்தான் பண்ணணும்னு இதுவரைக்கும் பண்ணிக்கிட்டிருக்கேன். ஒரே இயக்குனரோட படம் பண்ணும் போது, அவங்க என்ன கேப்பாங்கன்னு தெரியும், நாம என்ன பண்ணுவோம்னு அவங்களுக்குத் தெரியும். அதனாலதான் தொடர்ந்து ஒரே இயக்குனரோட படம் பண்றத தவிர்க்கிறேன்.
புது இயக்குனர்கள் கூட வேலை பார்க்க நான் தயாரா இருக்கேன். அப்பதான் நமக்கும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும். இனி, அதிகமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யணும்னு ஆசைப்படடேறன்,” என்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.