அண்ணன் தம்பிகளான இயக்குனர் ராஜா, நாயகன் ரவி இணைந்த கூட்டணியின் ஆறாவது படமான ‘தனி ஒருவன்’ படம் பிரமாதமான வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அனைவருக்கும் நன்றி என இயக்குனர் மோகன் ராஜா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
“தனி ஒருவன்’ படம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருப்பதற்கு ரசிகர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படத்திற்கு அவர்கள் சரியானதொரு அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
பொதுவாக என்னுடைய படங்களை பெண்கள்தான் அதிகம் வந்து பார்ப்பார்கள் என்று சொல்வார்கள். அதே போல இந்தப் படத்தையும் அவர்கள் அதிகமாக வந்து பார்த்து ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள்.
தினமும் பல இளைஞர்களிடமிருந்து எனக்கு போன் வருகிறது. இந்தக் காலத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்தால் இளைஞர்கள் பார்க்க மாட்டார்கள் என படம் பார்ப்பதற்கு முன் பலரும் சொன்னார்கள். ஆனால், இன்றைய இளைஞர்கள் அதை மாற்றிக் காட்டி விட்டார்கள். நல்ல படத்தை அவர்கள் எப்போதும் ரசிப்பார்கள் என்பதற்கு இந்தப் படம் மிகப் பெரும் உதாரணம்.
படத்தைப் பார்த்து பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். அன்புமணி ராமதாஸ் போன் செய்து இதுவரை நான் பார்த்ததிலேயே இந்தப் படம்தான் மிகவும் சிறந்த படம் என்றார். பல இயக்குனர்கள், விஜய், விக்ரம் உள்ளிட்டவர்கள் போன் செய்து பாராட்டி வருகிறார்கள்.
ஒரு நல்ல சமூகப் பிரச்சனையை எடுத்துக் கொண்டு இந்தப் படத்தை இயக்கினேன். இதை மாநிலம் தாண்டி இந்திய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் எனது ஆசை,” என்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.