‘தனி ஒருவன்’ என் நெஞ்சில் குத்திய ‘பச்சை’ – ஜெயம் ரவி

மோகன் ராஜா இயக்க ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த ‘தனி ஒருவன்’ படம் கடந்த வாரம் வெளிவந்தது.

மிகப் பெரும் வெற்றியை இந்தப் படம் பெறக் காரணமாக இருந்த ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க படக் குழுவினர் இன்று மாலை பத்திரிகையளார்களைச் சந்தித்தார்கள்.

அப்போது தனது வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கும் அண்ணன் மோகன் ராஜா பற்றி ஜெயம் ரவி மிகவும் உருக்கமாகப் பேசினார்.

“எங்க அண்ணனோட சந்தோஷம் இத்தனை வருஷம் என்னவா இருந்துச்சின்னா, தம்பி ஜெயிச்சி சந்தோஷப்படறவரு. அவருக்குன்னு தனியா எந்த சந்தோஷமும் இல்லை.

எனக்கு 12 வயசுல அரங்கேற்றம் நடந்துச்சி. அதுக்கப்புறமா அதப் பத்தியே ஒரு வாரமா பேசிக்கிட்டிருப்பாரு. என் சந்தோஷம்தான் அவர் சந்தோஷமா இத்தனை வருஷம் இருந்துட்டிருந்தது. இப்பவும் அப்படித்தான் இருக்கிறாரு.

ஆனா, இன்னைக்குதான் உண்மையா மனசார நான் என் அண்ணனைப் பார்த்து சந்தோஷப்படற முதல் நாள்.

எல்லாருக்கும் வந்து அவரை ரீமேக் ராஜாவாதான் தெரியும். நான் அப்பலாம் மனசுக்குள்ளயே சிரிச்சிப்பேன். ஒரு நாள் வருவாரு, பண்ணுவாரு, அப்ப நான் உங்களைப் பார்த்து சிரிக்கிறேன்னு நினைச்சிப்பேன். அந்த நாள் வந்துடுச்சி.

இந்தப் படம் ரிலீசுக்கு முன்னாடி நான் சொன்ன ஒரு விஷயம். எங்க ஃபேமிலிக்கு மட்டுமே தெரிஞ்ச, சீரியஸ் ஃபிலிம் மேக்கர் ராஜா, ரிலீசுக்கு அப்புறம் உலகத்துக்கே தெரியப் போறாருன்னு சொன்னேன். அதான் இன்னைக்கு நடந்திருக்கு. அதை சொன்னேன்கற பெரிய பெருமை எனக்கிருக்கு.

எனக்கு ஒரு மரியாதையையும், அந்தஸ்தையும் இந்தப் படம் மூலமா எங்க அண்ணன் ஏற்படுத்திக் கொடுத்திருக்காரு. நன்றி என்பதையும் தாண்டி அவருக்கு ஒரு சல்யூட், ஹேட்ஸ் ஆஃப்ணா.

ஜெயம் ரவின்னு உங்க பேர் இருக்குது, அதை இனி ‘தனி ஒருவன்’ ரவின்னு மாத்தீப்பீங்களான்னு இப்பக் கூட கேட்டாங்க. ‘ஜெயம்’கறது எனக்கு ஒரு விசிட்டிங் கார்டு, அதை மாத்த முடியாது, ‘தனி ஒருவன்’ என் நெஞ்சுல குத்தின பச்சை. என் உடம்போட ஒட்டினது அது, அதை யாராலயும் எடுக்க முடியாது. உயிர் உள்ளவரை, உடல் உள்ளவரை, ‘தனி ஒருவன்’ என் நெஞ்சில்தான் இருக்கும்,” மிகவும் நெகிழ்வாகவும், உருக்கமாகவும் நன்றி தெரிவித்துப் பேசினார் ஜெயம் ரவி.

Read Previous

பாண்டிராஜ் – குறளரசன் திடீர் மோதல்…

Read Next

‘தனி ஒருவன்’ – என் இதயத்திலிருந்து வந்த படம் – மோகன் ராஜா