தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்த தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த ‘விசாரணை’ படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
‘விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது தொடர்ந்து நல்ல படைப்புகளை தயாரிக்க உற்சாகம் தரும் என தனுஷ் தெரிவித்துள்ளார்.
“சில படைப்புகளை துவங்கும் போது நமக்கே தெரியும், இப்படைப்பு மிக முக்கிய இடத்தைப் பெறும் என்பது. அதைப் போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற ‘விசாரணை’.
‘விசாரணை’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திரக்கனி மற்றும் படத் தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘விசாரணை’ படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு மூன்று மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும். மூன்று தேசிய விருதுகளைத் தந்துள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும்.
இதைப் போன்ற படைப்புகளை தமிழ் மக்கள் நிச்சயம் ஏற்று கொள்வார்கள் என்ற விஷயம் எனக்கு மகிழ்ச்சியையும் , மேலும் இது போன்ற படைப்பை வழங்க உற்சாகத்தையும் தருகின்றது,” என தனுஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தேசிய விருதுகளில் தனுஷ் தயாரித்த ‘காக்கா முட்டை’ படம் தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.