‘பசங்க’ படத்தில் நடித்தவர்தானே ஸ்ரீராம், அதனால் , இன்னும் ‘பசங்க’ மாதிரியே இருப்பார் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
தத்துவமாகவே பேசுகிறார். ஸ்ரீராம் நாயகனாக நடித்துள்ள ‘பைசா’ படம் வரும் 1ம் தேதியன்று வெளியாக உள்ளது. படத்தைப் பற்றித்தான் அவர் தத்துவார்த்தமாகப் பேசுகிறார்.
“பணமே வாழ்க்கையில்லை, பணம் இல்லாமலும் வாழ்க்கையில்லை, இது தான் எங்கள் ‘பைசா’ படத்தின் ஒரு வரிக்கதை.
உணர்ச்சிகளால் சூழப்பட்ட ஒரு தனி மனிதனுக்கு கிடைக்காத மரியாதை, வெறும் காகிதத்தால் ஆன பணத்திற்கு அதிகளவில் கிடைக்கிறது. அந்த அளவிற்கு ‘பைசா’ மனிதனின் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்து வருகிறது.
குப்பை பொறுக்கும் இளைஞனாக இந்த ‘பைசா’ படத்தில் நான் நடித்துள்ளேன். அவன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், அவனைக் கடந்து போகும் ஒரு அழகிய காதல், எதிர்பாராத, திருப்பங்கள் என பல சுவாரசியங்களுடன் உருவாகி உள்ளது ‘பைசா’ திரைப்படம்,” என்கிறார் ஸ்ரீராம்.
நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்த ‘பைசா’ திரைப்படத்தை விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கியுள்ளார்.