பாலசுப்ரமணியன் தயாரிக்க எழில் இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘செஞ்சிட்டாளே என் காதல’.
எழில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தும் சில திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர்.
கதாநாயகியாக விஜய் டிவி ‘ஆபீஸ்’ஸ் சீரியலில் நடித்த மதுமிளாவும் அவரது அம்மாவாக ‘மெட்ராஸ், கத்தி’ படங்களில் நடித்த ரமாவும், அப்பாவாக ‘மெட்ராஸ், மாரி, கபாலி’ படங்களில் நடித்த மைம் கோபியும் நடிக்கின்றனர். கதாநாயகனின் அப்பாவாக அஜய் ரத்னம் நடிக்க, நாடோடிகள் அபிநயா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இவர்கள் தவிர கயல் வின்சென்ட், அர்ஜுனன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தலைப்பு சற்று வித்தியாசமாக இருந்தாலும் பெண்களை அவதூறு செய்யும் படமல்ல இது. காதலில் தோல்வியடைந்த கதாநாயகன், தன் வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சனைகளும், இறுதியில் அவனுக்குக் கிடைக்கின்ற தீர்வும், சமீப காலங்களில் காதல் மலினப்பட்டு வருகின்றதா என்பதற்கான விடையும் தான் படத்தின் கதைக் கருவாகும். காதல் குறித்த மற்ற தமிழ்த் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவு மணீஷ் மூர்த்தி, இசை ராஜ் பரத், படத்தொகுப்பு லாரன்ஸ் கிஷோர், சண்டைப்பயிற்சி ஹரி தினேஷ் ஆகியோர் பணியாற்ற பாலசுப்ரமணியன் தயாரிக்கின்றார்.
படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்து முடிந்துள்ளது. ஆண் பெண் இருபாலருக்கும் இயல்பாக கருத்து சொல்லும் விதத்தில் இந்த ‘செஞ்சிட்டாளே என் காதல’ அமையும்.