‘காக்கா முட்டை’ படத்திற்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குற்றமே தண்டனை’ படம் நாளை மறுநாள் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகிறது.
விதார்த் தயாரித்து நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் பூஜா தேவரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், நாசர், ரகுமான் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
‘குற்றமே தண்டனை’ எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பது பற்றி படத்தின் இயக்குனர் மணிகண்டன் கூறியதாவது,
“நாம பார்த்த த்ரில்லர் படங்கள் எல்லாமே இதுவரைக்கும் ‘டிராமா’ மாதிரிதான் சொல்லப்பட்டிருக்கு.
த்ரில்லர் படம்னா அதுல காதல், பாடல்கள் எல்லாமே தேவையில்லாதது. ‘குற்றமே தண்டனை’ ஒரு உண்மையான த்ரில்லர் படம். இப்படி ஒரு படத்தை இதுவரைக்கும் பார்த்திருக்க மாட்டீங்கன்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும்.
ஒரு கொலை நடக்குது, அதைச் சுற்றி சில கதாபாத்திரங்களுக்குள்ள நடக்கிற சம்பவங்களை யதார்த்தமா சொல்லியிருக்கோம்.
‘காக்கா முட்டை’ படம் முடிஞ்சதும் இந்தப் படத்தை ஆரம்பிச்சோம். நான் படம் எப்படியெல்லாம் இருக்கணும்னு சொன்னேனோ அதை தயாரிப்பாளர் விதார்த் ஏத்துக்கிட்டாரு.
படத்துல அவர்தான் நாயகன். கண் பார்வை குறைபாடுள்ள ஒரு கதாபாத்திரம். அந்த மாதிரியான கதாபாத்திரம் படத்துக்குத் தேவை, ஏன்னா, அது கதையில முக்கியமான ஒரு காரணியாவும் இருக்கு.
பின்னணி இசைன்னு சொன்னாலே அது ராஜா சார்தான். படத்துல நிறைய மௌனமான காட்சிகள் இருக்கு. எந்த இடத்துல மௌனம் வேணும், இசை வேணும்னு தெரிஞ்சவர் அவரு. அதனாலதான் படத்துக்கு இளையராஜா சார்தான் வேணும்னு அவர் கிட்ட போனோம்.
‘காக்கா முட்டை’ வெற்றி எப்படி அமைஞ்சிதோ, அதை விட பல மடங்கு இந்த ‘குற்றமே தண்டனை’ படத்தோட வெற்றியும் அமையும்,” என்கிறார் இயக்குனர் மணிகண்டன்.