நம் இந்திய நாட்டைப் பற்றியும் நாட்டுப்பற்றைப் பற்றியும் மையப்படுத்தி வந்த பல படங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
அந்த வகையில் ‘காஸி’ படமும் உருவாகியுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வின் அடிப்படையில் இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார்கள்.
கண் முன்னே எதிரில் நின்று போர் தொடுக்காமல் எதிரி நாடு மறைந்து கொண்டு நீர் மூழ்கிக் கப்பல் மூலம் நம் நாட்டின் மீது போர் தொடுக்கிறது. அதை நம் நாட்டு வீரர்கள் எப்படி எதிர்கொண்டு எதிர்க்கிறார்கள் ?, எதிரிகளிடமிருந்து அவர்கள் எப்படி நம் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே ‘காஸி’ படத்தின் கதைக் களம்.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராணா டகுபட்டி கதாநாயகனாகவும், டாப்சி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, ஓம்புரி, நாசர் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.
சங்கல்ப் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தை பிவிபி சினிமா நிறுவனம் மேட்டினி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது.
நீர் மூழ்கி கப்பல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் கடலிலும், கடலுக்கு அடியிலும் படமாக்கப்பட்டுள்ளன.
கடலில் எடுக்கப்பட்டவை மட்டுமல்ல, படத்தில் வரும் அந்தக் கடலடிக் காட்சிகளும் ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தைத் தரும் என்கிறது படக் குழு.
அனைவரும் பார்க்கும் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாகிறது.
தேசம் பற்றிப் பேசும் இப்படம் மொழி எல்லை கடந்த ஒரு படமாக, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.