ரதீந்திரன் பிரசாத் தயாரித்து இயக்கும் படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’.
இப்படத்தில் அஷ்வின், குரு சோமசுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் பிரபல குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமான கிரேக் ப்யூரிட்ஜ் வில்லன் வேடத்தில் நடிப்பதோடு சண்டைப் பயிற்சிகளையும் அமைக்கிறார்.
ஜிப்ரான் இசையமைக்க இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ சஸாரா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சிறந்த அனிமேஷன் கலைஞரான பாப்சந்த் ருக்ரந்சரித் இப்படத்திற்கான அனிமேஷன் காட்சிகளை உருவாக்குகிறார்.
ராஜஸ்தானில் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்த குழுவினர் அடுத்த கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த உள்ளார்கள்.
இப்படத்தை இயக்கும் ரதீந்திரன் பிரசாத் இதற்கு முன் இயக்கி வெளியிட்ட ‘கொடைக்கானல் வோன்ட்’ என்ற வீடியோ உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு வீடியோவாக அமைந்தது.
கொடைக்கானல் மலைகளில் பாதரச கழிவுகளைக் கொட்டிய யுனிலிவர் நிறுவனத்திடமிருந்து கொடைக்கானல் மக்களுக்கு இழப்பீட்டினையும் பெற்றுத் தர காரணமாக அமைந்தது.
அந்த வீடியோவை ஹாலிவுட் கலைஞர்கள் அஷ்டன் குட்சர், மார்க் ருவல்லோ, நிக்கி மினாச், கெய் கவசாக்கி, மற்றும் சேகர் கபூர் போன்றவர்கள் பகிர்ந்தார்கள்.
ரதீந்திரன் எழுதி, இயக்கிய ‘ஸ்வேயர் கார்பரேஷன்’ என்னும் குறும்படம் 26 சர்வதேச அரங்குகளில் திரையிடப்பட்டதோடு மட்டுமன்றி கேன்ஸ் படவிழாவில் அள்ளி குவித்தது.
‘சென்னை புறம்போக்கு பாடல்’ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. எண்ணூர் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட சுற்றுச் சூழல் சீர்கேட்டையும், அதனை ஏற்படுத்திய அதிகாரிகளின் அலட்சியத்தியும் தட்டிக் கேட்கும் இப்பாடலை பிரபல கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா பாடியுள்ளார். இதுவும் சமூக வலைத் தளங்களில் தற்சமயம் வைரலாக பரவி வருகின்றது.
இப்படி சமூக அக்கறையுள்ள வீடியோக்களை இயற்றியுள்ள இயக்குநரிடம் இருந்து ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற நல்ல படத்தை எதிர்பார்கலாம் என படக்குழுவினர் பாராட்டுகிறார்கள்.
‘ஆரஞ்சு மிட்டாய், றெக்க’ படங்களைத் தயாரித்த பி.கணேஷ், இப்படத்தை ரதீந்திரன் பிரசாத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.