இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ‘நான்’ படத்தில் நாயகனாக அறிமுகமாகி, ‘சலீம், பிச்சைக்காரன், சைத்தான்’ என வித்தியாசமான கதை கொண்ட படங்கள் மூலம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறார்.
முதன் முறையாக ‘யமன்’ படத்தில் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். வித்தியாசமான ஹீரோ எனப் பெயரெடுத்தவர் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தது ஏன் என்பதற்கான காரணத்தையும் சொல்கிறார்.
“நான்’ படம் பண்ணிக்கிட்டிருக்கும் போதே இந்த ‘யமன்’ கதையைப் பத்தி நானும் டைரக்டர் ஜீவா சங்கரும் பேசியிருக்கோம். இந்தப் படத்தை நாங்க பண்ணுவோம்னு அப்ப நினைச்சிக் கூடப் பார்க்கலை.
இந்த ‘யமன்’ படத்துல நான் நடிச்சிருக்கிற கதாபாத்திரத்தை ஒரு இமேஜ் உள்ள ஹீரோ தான் நடிக்க முடியும். ஆனால், கடைசியில நானே பண்ண வேண்டியதாயிடுச்சி.
‘அமரகாவியம்’ படம் முடிஞ்ச உடனே திரும்ப ஜீவா சங்கர் கூட படம் பண்ணலாம்னு முடிவு பண்ணேன். அப்ப அவர் இந்த ‘யமன்’ கதையைப் பண்ணலாம்னு சொன்னாரு.
இந்தப் படத்தோட ஹைலைட்டே படத்தோட கதைதான். அவரே திரைக்கதை, வசனமும் எழுதியிருக்காரு.
இதுக்கு முன்னாடி நான் நடிச்ச படங்கள் ஒரு வித்தியாசமான கதைக் களத்துல இருக்கும். இந்தப் படம் ஒரு அரசியல் கதையுள்ள படம். அதனால படத்துல கொஞ்சம் ஹீரோயிசமும் இருக்கும்.
இந்தப் படத்தை டெக்னிக்கலா ரொம்ப அருமையா பண்ணணும்னு ரொம்பவே வேலை பார்த்திருக்கேன்.
இப்ப இருக்கிற அரசியல் சூழ்நிலைல இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கிற ஒரு படமா இருக்கும். படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட்தான். எல்லாருமே குடும்பத்தோட வந்து பார்க்கலாம்,” என்கிறார் விஜய் ஆண்டனி.