ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் நாயகன், நாயகியாக நடித்துள்ள ‘எமன்’ படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் அரசியல் கட்சித் தலைவராக மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தியாகராஜன் நடித்திருக்கிறார்.
‘எமன்’ படத்தின் கதையைக் கேட்டதுமே நடிக்க முடிவு செய்தேன் என்கிறார்.
“மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்ததும், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாகத் தேர்வு செய்து நடித்து வருகிறேன்.
ஒரு சில கதைகளைக் கேட்ட அடுத்த நிமிடமே, நாம் அதில் நடித்தாக வேண்டும் என்று நமக்கு தோன்றும். அப்படி எனக்கு கேட்ட மாத்திரத்திலேயே அவ்வாறு என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் ‘எமன்’.
முழுக்க முழுக்க அரசியல் கதைக் களத்தில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
நல்ல கதை, வசனங்களோடு ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படம் மூலம், நிச்சயமாக விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை எட்டுவார்,” என்கிறார் தியாகராஜன்.