விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்திருக்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்’.
மணி சேயோன் இயக்கத்தில் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, திருமுருகன், ஜெயக்குமார், லிவிங்ஸ்டன், சித்ரா லக்ஷ்மன், ‘டாடி’ சரவணன், பேபி மோனிக்கா, சேது மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
‘கட்டப்பாவ காணோம்’ – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக் கூடிய ஒரு திரைப்படம். ஒரு அறிமுக இயக்குநரோடு இணைந்து பணியாற்றுவதில் பொதுவாகவே எல்லா கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சற்று தயக்கமாக தான் இருக்கும்.
ஆனால் என் மீதும், என் கதை மீதும் முழு நம்பிக்கை வைத்து, தங்களின் முழு ஒத்துழைப்பையும் கொடுத்த சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் என்னுடைய தயாரிப்பாளர்கள் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு மீனை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இந்த ‘கட்டப்பாவ காணோம்,” என்கிறார் இயக்குநர் மணி சேயோன்.
“சிலர் தாங்கள் வளர்க்கும் நாய் அல்லது பூனையை அதிர்ஷ்டமாகக் கருதலாம். இன்னும் சிலர் தாங்கள் உடுத்தும் குறிப்பிட்ட நிற ஆடையை அதிர்ஷ்டமாகக் கருதலாம். அந்த வகையில், எனக்கு இந்த ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் என் வாழ்க்கையில் அமைந்த மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம். ஏனென்றால், இந்தப் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தான் எனக்கு இந்தி திரையுலகில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2017 ஆம் ஆண்டில் நான் நடித்து வெளியாகும் முதல் திரைப்படம் ‘கட்டப்பாவ காணோம்’. நிச்சயமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாகக் குழந்தைகளை அதிகளவில் கவரக்கூடிய ஒரு திரைப்படமாக இந்த படம் இருக்கும்,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
“இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகிக்கு மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த அனைவருக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மணி சேயோன். ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகை என்பதால், அவரோடு நடிக்க முதலில் எனக்கு பதட்டமாக இருந்தது.
கதாநாயகி ஐஸ்வர்யாவுடன் காதல் காட்சிகளில் நடிக்க தயக்கமாக இருந்தது. ஆனால் அவர் என்னிடம் சகஜமாகப் பழகியதால், அந்த பதட்ட நிலையில் இருந்து வெளியே வந்து நடித்தேன். இந்தப் படம் குழந்தைகளுடன் பெரியவர்களும் உற்சாகமாகப் பார்க்க கூடிய ஒரு படமாக இருக்கும்,” என்கிறார் சிபிராஜ்.
‘கட்டப்பாவ காணோம்’ படத்தை மார்ச் 17ம் தேதி ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் சரவணன் வெளியிடுகிறார்.