ராதாகிருஷ்ணன் அணிக்கு டி. சிவா அணி ஆதரவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான அடுத்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் தலைமையிலான முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்து போட்டியிலிருந்து விலகிக் கொண்டது.
அதன் சங்கமமாக இந்த விழா அமைந்தது.

தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும் போது

“இந்த முன்னேற்ற அணியினர் வெறும் வாய்ச் சொல் வீரர்கள் அல்ல. நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று விரிவாகப் பேசுவதில் விருப்பமில்லை. செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள். எங்கள் அணி சார்பில் முதல்கட்ட செயல்பாடுகளாக 10 முக்கிய வாக்குறுதிகளும் 10 நலத்திட்டங்களும் இப்போது அறிவித்திருக்கிறோம்,” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் போட்டியிலிருந்து விலகிய டி.சிவா பேசும் போது,

“கடந்த காலத்தில் சங்கம் எதுவுமே செய்யவில்லை என்பது மிகவும் தவறு.கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இரண்டைத் தவிர எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம். பல சிறு முதலீட்டுப் படங்கள் வெளிவர உதவியிருக்கிறோம். சிறு முதலீட்டுப் படங்கள் 125 படங்களில் 54 படங்களை சாட்டிலைட் உரிமைக்கு விற்றிருக்கிறோம். சேனல்கள் எப்.எம்..விளம்பரக் கட்டணங்களை 2500 என்பதை 900 என்றும்500 என்றும் குறைத்திருக்கிறோம்.

திருட்டு விசிடி பற்றி விஷால் இவ்வளவு பேசுகிறார். எங்கள் சங்கத்தில் அவருக்கே பொறுப்பு கொடுத்துத் திருட்டு விசிடியைக் கவனிக்கச் சொன்னோம். ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை. எதுவுமே கண்டு கொள்ள வில்லை. அவரால் தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்ய முடியாது.

விஷாலிடம் தயாரிப்பாளர் சங்கத்தில் அலுவலக நிர்வாகத்தினர் தொழில் முறை தயாரிப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றோம், கேட்க வில்லை. அவர்கள் தினமும் ஓட்டல், பார்ட்டி, பணம், கவர், தங்கம் என்று தயாரிப்பளர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களிடம் எப்படி நேர்மை இருக்கும் ?

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி, அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி ? தவறானவர்களை உள்ளே விட மாட்டோம். தயாரிப்பாளர்களின் வலி நடிகர்களுக்குத் தெரியாது. இந்த அணி வெற்றி பெறுவது உறுதி,” என்றார்.

ராதாகிருஷ்ணன் அணியும், டி. சிவா அணியும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பதற்கான இணைப்பு முயற்சிகளை எடுத்த தற்போதைய தலைவர் கலைப்புலி எஸ். தாணு பேசும் போது,

“இளைய தலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை பார்த்து தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றுதான் நான் இங்கு வந்தேன்.

தம்பி டி.சிவாவை முரளிதரன் முன் மொழிந்த போது சரி என்று நினைத்திருந்தேன். பலரும் ஏன் இத்தனை அணி என்று கேட்டார்கள். விஷாலின் யதேச்சதிகாரம், ஆணவம், அகங்காரம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரது நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது.

தேசிய விருது பெற்ற சேரனுக்கு 5000 ரூபாய் தரச் சொல்கிறார். 2012ல் ‘நீதானே என் பொன் வசந்தம் ‘ படத்துக்கான சிக்கலில் கௌதம்மேனன் நின்ற போது ஒரு கோடி ரூபாய் நான் உதவி செய்தேன்.

‘பாயும்புலி’ பட சிக்கல் வந்த போது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார். பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா ? ஒரு முறை 50 லட்சரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக் கெஞ்சினார்.

சங்கத்தில் சிரமப்படும் 1512 தயாரிப்பாளர்களில் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள். விஷால் தம்பி வாயை அடக்கிப் பேசு நாவடக்கம் தேவை. தம்பி விஷால் ‘மதகஜராஜா’ 30 கோடி பிரச்சினையில் உள்ளது.

நீ என்ன புரட்சி செய்தாய் ? புரட்சிதளபதி என்கிறாயே, உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன. வரும் 26ஆம் தேதி ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.

ஞானவேல்ராஜா என்னென்னவோ பேசுகிறார் கொம்பன்’ படத்துக்கு பிரச்சினை வந்தபோது அழுததும், நாங்கள் உதவியதும் நினைவில்லையா ?.

பிரகாஷ்ராஜ் ஏதேதோ பேசுகிறார் அவர் ஒழுங்காக நேரத்துக்குப் படப்பிடிப்பு போனதுண்டா ? உங்கள் மேல் எவ்வளவு புகார்கள் ?.

இப்படிப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் போகலாமா? ”

நிகழ்ச்சியில் ஜேஎஸ்கே. சதீஷ் குமார், ஜே. ரித்தீஷ், கே. ராஜன் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முன்னேற்ற அணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Read Previous

When is VIP 2 hitting screens ?

Read Next

‘வைகை எக்ஸ்பிரஸ்’ – விறுவிறுப்பாக இருக்கும் – ஆர்கே