ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரித்த ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றிய சக்தி ராஜசேகரன் இயக்கத்தில் கலையரசன், சாட்னா டைட்டஸ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘எய்தவன்’.
‘மதயானைக் கூட்டம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து, ‘மெட்ராஸ்’ படத்தில் யார் இவர் என அனைவரையும் பார்க்க வைத்து, ‘கபாலி’ படத்தில் கவனிக்கப்பட்ட கலையரசன் ‘எய்தவன்’ படத்தின் மூலம் தனி நாயகனாக தமிழ்த் திரையுலகத்தில் அடியெடுத்து வைக்க உள்ளார்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள கலையசரன் ‘எய்தவன்’ படத்தில் ஒரு கனமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கல்வித் துறையில் நடை பெறும் தில்லுமுல்லுகளை வெளிப்படுத்தும் படமாக இது இருக்கும். மகளின் படிப்புக்காக குடும்பமே பெரும் கனவுடன் இருக்கிறது. தங்கையின் படிப்புக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் கலையரசன். ஆனால், அவர்கள் எதிர்பார்க்காத விதத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது.
அந்பத முக்கியமான சம்பவத்தால் 16 பேர் பாதிப்படைகிறார்கள். ஆனால், அந்தப் பிரச்சனைக்குக் காரணமான சம்பவத்தை எய்தவன் யார் என்பதை கதாநாயகனான கலையரசன் கண்டுபிடிக்கிறார். இதுதான் படத்தின் கதை.
படத்தின் டிரைலரே பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
இந்தப் படத்தில் வேலராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், வினோத், சௌமியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அபி & அபி, சக்திவேல் பிலிம் ஃபேக்டரி இப்படத்தை வெளியிடுகிறார்கள்.