யூ டியூப் டூ சினிமா, பலருக்கு வாய்ப்பு கொடுத்த ஹிப்ஹாப் தமிழா

அவ்னி மூவிஸ் சுந்தர். C வழங்க ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கும் படம் ‘மீசைய முறுக்கு’.

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நாயகனாகவும் அறிமுகமாகும் படம் இது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சுந்தர். C, ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகி ஆத்மிகா, மனிஷா, நடிகர் விக்னேஷ் காந்த் , ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார், ஒளிப்பதிவாளர் கீர்த்தி வாசன் , படத் தொகுப்பாளர் பென்னி ஆலிவர் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது,

“இண்டிபென்டன்ட் மியூசிக்கில் ஆரம்பித்து, திரைப்பட இசையமைப்பாளராகி, தற்போது ஹீரோ மற்றும் இயக்குநராக ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளேன். இதற்குக் காரணமாக இருந்த தயாரிப்பாளர் சுந்தர்.C அவர்களுக்குத் தான் முதலில் நன்றி கூறவேண்டும்.

நான் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தை மிகப் பெரிய தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் சுந்தர்.C சார் என்னிடம் கூறினார். ஆனால் எனக்கு என்னுடன் பல ஆண்டுகளாக இனைந்து பயணிக்கும் குழுவோடு நான் இந்த படத்தில் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியவுடன் அதுவும் நன்றாகத் தான் இருக்கும் என்று உடனே ஒப்புக்கொண்டார்.

இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என சுந்தர்.C சாரிடம் கேட்ட நடிகர் விவேக் சார் தான். விவேக் சார் தான் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்தது போலவே அவரும் நடித்தார். அவருடைய கதாபாத்திரம் மிகச்சிறப்பாக இருக்கும். ஏற்கனவே பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

என்னைப் போல் யூ டியூப் மூலம் புகழ் பெற்ற பலர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். குறும்படம் எடுத்து பலர் டீமாக சினிமாவுக்கு வந்தார்களோ அதே போல் இப்போது யூடியூப் மூலம் சென்சேஷன் ஆன நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். எங்களைப் போல் இன்னும் பலர் வருவார்கள் அதற்கு ‘மீசைய முறுக்கு’ மிகப் பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும்,” என்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

Read Previous

‘பண்டிகை’ என்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் – கிருஷ்ணா

Read Next

30 இடங்களில் ‘96’ படப்பிடிப்பு