தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்ஸிக்கும் இடையே பிரச்சனை உருவாகி நேற்று முதல் தமிழ்த் திரையுலகத்தில் பெப்ஸி சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இரு தரப்பிற்கும் இடையே பேச்சு வார்த்தை நடப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இதனிடையே, இன்று காலை ரஜினிகாந்தை பெப்ஸி தரப்பிலிருந்து, தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டவர்கள் சந்தித்துப் பேசினர்.
அவர்களிடம் வேலை நிறுத்தம் செய்யாமல் இரண்டு தரப்பும் பேசி சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து பின்னர் வெளியிட்ட அறிக்கையில், “எனக்குப் பிடிக்காத வார்த்தைகளில் ‘வேலை நிறுத்தம்’ என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகௌரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்ஸி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்,” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் வேண்டுகோளை ஏற்று இரு தரப்பும் விரைவில் பேசுவார்களா, அல்ல அரசு தரப்பில் அழைக்கப்பட்டுள்ள பேச்சு வார்த்தையிலும் கலந்து கொண்டு பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வருவார்களா என்பது திரையுலகத்தில் உள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.