பெப்ஸி வேலை நிறுத்தம் ரத்து – ஆர்.கே. செல்வமணி அறிவிப்பு

திரைப்படத் தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்ஸி அமைப்பினர் கடந்த இரண்டு நாட்களாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தயாரிப்பாளர் சங்கத்தினர் வழங்குவதாக ஒப்பந்தம் செய்த ஊதியம், பெப்ஸியுடன் மட்டுமல்லாது யாருடனும் வேலை செய்வோம் என்று அறிவித்ததைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர்.

இதனால் 40க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதே சமயம் விஷால் நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது.

நேற்று ரஜினிகாந்தை சந்தித்த ஆர்.கே.செல்வமணியிடம், சுமூகமாகப் பேசித் தீர்வு காணுங்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

அரசு தரப்பிலும் நாளை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனிடையே, இன்று காலை பெப்ஸி சம்மேளனத்தில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாகவும், நாளை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் பெப்ஸி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பெப்ஸி தரப்பினருடன் மட்டுமல்லாது மற்றவர்களுடனும் வேலை செய்வோம் என தயாரிப்பாளர் சங்கத் தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ரஜினியின் வேண்டுகோளை ஏற்பார்களா ?

Read Next

Madura Veeran – Official Teaser