நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாக்குவது ‘அந்தாலஜி’ வகைப் படங்கள். அதில் இடம் பெறும் குறும்படங்களுக்குள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக் களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள். அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே இடம்பெற்றிருக்கும். இதுதான் உலக சினிமாவிலும் வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம் போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. இது உலக அளவில் முதல் முயற்சி என்றே சொல்லலாம்.
பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தவிர படத்தின் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.
இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். எழுத்தாளர் மட்டுமல்லாமல் மனிதன், சென்னையில் ஒரு நாள், வனயுத்தம், வனமகன் ஆகிய படங்களின் மூலம் ஒரு வசனகர்த்தாவாகவும் அடையாளம் காணப்பட்டவர் இவர். இந்த ஆறு அத்தியாயத்தில் ஒரு அத்தியாயத்தை எழுதி, இயக்குவதன் மூலம் முதல் முறையாய் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.
இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் மீதி நான்கு அத்தியாயங்களை இயக்கியுள்ளார்கள்.
இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘இந்த 6 அத்தியாயம்’ படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், “பேபி, வீர சிவாஜி, நிசப்தம்” படங்களில் நடித்த பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்படக் கலைஞர் பொன். காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
படத்தின் ப்ரோமோ பாடலை சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இவர் மாதவன் – விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ மற்றும் விரைவில் வெளிவரவுள்ள ‘புரியாத புதிர்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். இந்தப் பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல், நடனக் கலைஞர்களை கொண்டு படமாக்கப்பட்டு, 2டி அனிமேஷனாகவும் மாற்றப்பட்டுள்ளது.
ஆஸ்கி மீடியா ஹட் எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல் மற்றும் டிரைலரை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இலங்கையில் மிகப் பிரம்மாண்ட முறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட உள்ளனர்.
இரு வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்ட்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் வெளியிட்டார்.