அமெரிக்காவில் வாழும் கணபதி முருகேஷ், ஜெயப்பால் நடேசன், சிங்கப்பூரில் வாழும் குரு சரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜல்லிக்கட்டு’.
சந்தோஷ் கோபால் இயக்கும் முதல் திரைப்படம் இது.
கென்யாவின் மிக ஆபத்தான விலங்குகள் இருக்கும் காட்டுப் பகுதியில் பழங்குடிகள் எனப்படும் காட்டுவாசி இனமக்கள் வாழும் மசாய் மாரா கிராமத்தில் படப்பிடிப்பு நடத்த முதல் தென்னிந்திய ‘ஜல்லிக்கட்டு’.
கென்யாவின் மசாய் மாரா கிராம பழங்குடிகள் எந்த ஒரு தகவல் தொடர்பு குறுக்கீடும் இல்லாமல் தங்களின் மிகப் பழமையான கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை இன்றளவும் பாதுகாத்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதார அடையாளமான கால்நடைகளுடன் ஒன்றுபட்டு வாழும், மிகப் பழமையான பழங்குடிகள் கென்யாவின் மசாய் மாரா கிராம பழங்குடிகள் ஆவர்.
தமிழர்களின் அடையாளம் மற்றும் கலாச்சார விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் காளைகளுக்கும் மசாய் பழங்குடிகள் வைத்திருக்கும் காளைகளுக்கும் தனித்துவமான ஒற்றுமைகள் உள்ளன.
சென்னை மெரினாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் அறப்போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் படம் ‘ஜல்லிக்கட்டு’.
இந்திய மற்றும் சர்வதேசக் குழுவினருடன் இணைந்து மசாய் கிராமத்தில் இப்படத்தின் பரவலான காட்சிகள் படமாக்கப்பட்டது. மேலும், மசாய் மக்களின் கால்நடை சார்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சார நடைமுறைகளை 15 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து படமாக்கினர்.
ஜல்லிக்கட்டு படக் குழுவினர் மசாய் கிராமப் பகுதியைச் சுற்றி உள்ள ஆபத்தான விலங்குகள் வாழும் வனப்பகுதியில் தங்கி அங்கு வரும் சுற்றுலாவாசிகள் பயன்படுத்தும் வெப்பப்படுத்தப்பட்ட காற்று நிரப்பிய பறக்கும் மிகப் பெரிய (Gas) பலூன் மூலம் அந்த வனப்பகுதியில் வாழும் சிங்கம், காண்டாமிருகம், ஒட்டகச் சிவிங்கி மற்றும் காட்டு யானை போன்றவற்றை ஐந்து நாட்களுக்கும் மேலாக காட்சி படுத்தியுள்ளனர். இது போன்று ஆபத்தான வன விலங்குகள் வாழும் இடத்திற்கு நேரடியாக சென்று படப்பிடிப்பு நடத்தப்படும் முதல் தமிழ் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’தான்.
பறக்கும் வெப்பக் காற்று பலூன் மூலம் காட்சிப்படுத்தப்பட்டவை பார்வையாளர்களுக்கு மிகவும் மாறுபட்ட மகத்தான அனுபவங்களைக் கொடுக்கும். இந்தக் காட்சிகளில் வரும் விலங்குகள் அனைத்தும் அங்கு உள்ள வனக் காவலர்களின் உதவியுடன் விலங்குகளுக்கு மிக அருகாமையில் இருந்து படமாக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு உள்ள மாரா நதியின் வழியே நடந்து சென்று டான்சானியாவின் கிளிமஞ்சாரோ சிகரத்தின் விளிம்பு வரை பயணம் செய்து உள்ளனர்.
நைரோபியில் உள்ள தேசிய அருங்காப்பகத்தில் பாதுகாக்கப்படும் வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டு மேற்கு ஆப்ரிக்காவில் வாழும் மக்கள் மற்றும் கால்நடைகளைப் பற்றி ஆராய்ந்த போது தமிழ் மக்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு பயன்படுத்தும் காங்கேயம் காளை போன்ற தமிழ்நாட்டு கால்நடைகளுக்கும், மசாய் மாரா பகுதியில் உள்ள கால்நடைகளுக்கும் மரபணு சார்ந்த மிக நெருக்கமான நேரடி ஒற்றுமைகள் இருப்பது தெரிய வந்தது.
மேலும் கால்நடைகளைப் பற்றி பல்வேறு தகவல்களை கால்நடை ஆராய்ச்சியாளரான கார்த்திகேயன் சேனாதிபதியின் உதவியுடன் தெரிந்து கொண்டுள்ளனர்.
‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மாபெரும் இந்திய தேசத்தின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய அறப் போராட்டமான, தமிழக இளைஞர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் நடத்திய அறப் போராட்டத்தையும் அதே சமயத்தில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மேற்கொண்ட சட்டத் திருத்த முயற்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்தின் சில காட்சிகள் போராட்டம் நடைபெறும் போது படமாக்கப்பட்டு படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தினை தயாரிக்கும் அஹிம்சா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் நிருபமா, ஒளிப்பதிவு இயக்குநர் எஸ். கே. பூபதி, இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், படத் தொகுப்பாளர் காசி விஸ்வநாதன், ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார் ஆகியோரது சிறந்த பங்களிப்புடன் உருவாகி வரும் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.