தமிழ் சினிமாவின் பெருமை எனப் பலராலும் எதிர்பார்க்கப்படும் ‘2.0’ படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியானது.
ரஜினி படம் சம்பந்தமான வீடியோ ஒன்று யு டியூபில் வெளியாகிறது என்றாலே அது அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தும்.
ஆனால், 2.0 மேக்கிங் வீடியோ அப்படி எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. திரையுலக ரசிகர்கள் ‘விவேகம்’ படத்தின் ஜுரத்தில் மூழ்கிக் கிடக்கும் சமயத்தில், தவறான நேரத்தில் இந்த வீடியோவை வெளியிட்டதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
‘விவேகம்’ படம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்து ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. படத்தின் முதல் நாள் வசூல் ‘கபாலி’ படத்தின் வசூலை முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். அஜித் ரசிகர்களுக்கு அப்படி எதுவும் ஏற்படாதது ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ரசிகர்களோ, அடுத்து ‘மெர்சல்’ படத்தின் எந்த வீடியோ வரும், அதை ‘விவேகம்’ டிரைலரை விட அதிக லைக்குகள் கொடுத்து சாதனையை ஏற்படுத்த வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.
இணையத்தை அதிகம் பயன்படுத்தும் விஜய், அஜித் ரசிகர்கள் வேறு ஒரு எண்ணங்களில் இருக்க இந்த சமயத்தில் நேற்று வெளிவந்த ‘2.0’ மேக்கிங் வீடியோ, இதுவரை 34 லட்சம் பார்வைகளையும், 1,29,000 லைக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளது.
டிவிட்டரில் ரஜினிகாந்தைத் தொடரும் 40 லட்சம் ஃபாலோயர்கள், ஏ.ஆர்.ரகுமானைத் தொடரும் 1 கோடியே 50 லட்சம், அக்ஷய் குமாரைத் தொடரும் 1 கோடியே 90 லட்சம், எமி ஜாக்சனைத் தொடரும் 13 லட்சம், இயக்குனர் ஷங்கரைத் தொடரும் 14 லட்சம் ஃபாலோயர்களும் இந்த 2.0 மேக்கிங் வீடியோவைப் பார்த்திருந்தாலே அது 4 கோடி பார்வைகளைத் தொட்டிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நிகழாமல் போயிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
இனிமேலாவது, டிவிட்டரைத் தொடரும் அத்ததனை லட்சம் பேரும், உண்மையானவர்கள் அல்ல, டிவிட்டர் ஃபாலோயர்கள் மூலம் ஒரு படத்தை வெற்றி பெற வைத்துவிட முடியாது, வெளியாகும் வீடியோக்கள் சாதனை படைத்துவிட முடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி.
ஒரு படத்தின் எந்த வீடியோவும் நன்றாக இருக்கிறது என்ற தகவலோ, செய்தியோ வெளிவந்தால்தான் அது ரசிகர்களைச் சென்றடையும்.
‘பாகுபலி 2’ படத்தின் வீடியோக்கள் யு டியுபில் வெளியான போது அவை பெரிதும் சாதனை படைத்தன. அந்தப் படம் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் யாருக்குமே ‘2.0’ படக் கலைஞர்கள் போல டிவிட்டரில் ஃபாலோயர்கள் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
‘2.0’ படத்தைப் பொறுத்தவரையில் ‘பாகுபலி 2’ படத்தை விடவும் அதிகமான மார்க்கெட்டிங் இருந்தால் மட்டுமே அது மிகப் பெரும் சாதனையைப் புரிந்து தமிழ் சினிமாவின் பெருமையைப் பேசும்.