பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றும் ‘நீட்’ தேர்வு என்ற சிக்கலால் கிராமத்தில் படித்து வளர்ந்த ஏழை மாணவி அனிதா மருத்துவப் படிப்பில் சேர்ந்து டாக்டர் ஆக முடியாத கனவால் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணம் பொதுமக்களிடத்திலும் திரையுலகத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஏழை மாணவ, மாணவிகளின் படிப்பிற்காக தொடர்ந்து உதவிகளைச் செய்து வரும் நடிகர் விஷால் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
“தங்கை அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்தேன். மிகுந்த மன வேதனை அடைந்தேன். அனிதா, தான் பாதிக்கப்பட்டது போல பிற மாணவ மாணவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நீதிமன்ற படிகளில் ஏறி போராடியவர். நேற்று ஒரு வார இதழில் அனிதா பற்றி எழுதியிருந்ததை படித்து மிகுந்த பெருமைப்பட்டவனை இன்று வேதனைக்குள்ளாக்கி விட்டாள் அனிதா.
196.5 கட் ஆஃப் மார்க் பெற்றும் கூட அனிதா மருத்துவ படிப்புக்கு தகுதியடையவில்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பதிலாக நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வார்கள் அல்லது மறந்துவிடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். இனி தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் பாதிக்காத வகையில் எங்களுக்காக ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும்.
இப்படி நீட் தேர்வு குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட, அனிதாவைப் போன்ற தம்பி தங்கைகளுக்கு ஒரு கோரிக்கை. தயவுசெய்து இதுபோன்ற தவறான முடிவு எடுக்காமல் என்னை போன்றவர்களை ஒரு சகோதரனாக நினைத்து அணுகினால் படிப்புக்குண்டான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.