கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘அறம்’.
அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குனர் கோபி நயினார், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், நடிகர்கள் பழனி பட்டாளம், ஈ.ராமதாஸ், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கோபி நயினார், தான் இயக்குனராக அறிமுகமாவதற்கு பலர் தடையாக இருந்தார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
‘கத்தி’ படம் வெளிவந்த போது அந்தக் கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்தவர் கோபி நயினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த சில பிரச்சனைகளின் போது மிகப்பெரிய ஆதரவாக இருந்தது பத்திரிகையாளர்கள் தான். அவர்கள் எழுதிய செய்திகளைப் படித்து பலர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அதன் மூலம் தான் இந்த இப்படத்தை இயக்கும் மிகப் பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது என்பது உண்மை.
இயக்குனர் சற்குணம் தான் தயாரிப்பாளர் ராஜேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின் நயன்தாராவுக்கு கதை சொல்ல வைத்தார்கள், சில மணி நேரங்களிலேயே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். எல்லாமே ஒரு கனவு போல வேகமாக நடந்தது.
கதை ஓகே ஆனபிறகு கூட இந்தப் படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள். ஆனாலும், நயன்தாரா மேடம் உறுதியாக இருந்து இந்த படத்தை முடிக்க துணை நின்றார். இந்தப் படத்தில் என்னைப் போலவே எல்லோருக்கும் சமூக அக்கறை இருந்தது, அதனால் தான் எல்லோரும் இந்தப் படத்துக்குள் வந்தார்கள். முதலில் பாடல்கள் வேண்டாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். பின்னர் படத்தை முடித்த பிறகு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு போட்டுக் காட்டி, உமாதேவியின் வரிகளில் பாடல்களை சேர்த்தோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசிய நயன்தாரா, நிச்சயம் படம் வெற்றி பெறும். அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்தும் வரை நான் உடன் இருப்பேன் என்றார். எங்களைப் போன்ற கலைஞர்களை பத்திரிக்கையாளர்கள் நீங்கள் தான் அடக்குமுறையில் இருந்து காப்பாற்ற வேண்டும்,” என்றார் இயக்குனர் கோபி நயினார்.
பொதுவாக ஹீரோக்கள்தான் புதிய இயக்குனர்கள் அறிமுகமாகக் காரணமா இருப்பார்கள். ஆனால், வித்தியாசமாக கோபி நயினார் இயக்குனராக அறிமுகமாக நயன்தாரா காரணமாக இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், அவரை அடுத்த கட்டத்திற்கும் கொண்டு செல்வேன் என்று உறுதியும் அளித்திருக்கிறார்.
இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஹீரோயினா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் நயன்தாரா.