பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழாவில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னத்திற்கு கர்நாடக முதல்வர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கிறார்.
பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழா குழுவினர் சார்பாக அமைக்கப்பட்ட 13 பேர் அடங்கிய குழு இயக்குனர் மணிரத்னம் சினிமாத் துறைக்கு சேவை செய்ததற்காக அவரைத் தேர்வு செய்துள்ளது.
இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் முதன் முதலில் ‘பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னடப் படம் மூலம்தான் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் அவர் சினிமாவிற்கு புதிய கோணத்தை அவரது படங்கள் மூலம் கொடுத்தார். அதன் அடிப்படையில் தேர்வுக் குழுவினர் அவரைத் தேர்வு செய்துள்ளார்களாம்.
பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழா நாளை மார்ச் 1ம் தேதி நிறைவு பெறுகிறது. நாளை திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் விருது பெற்றவர்களுக்கும், மணிரத்னத்திற்கும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா விருது வழங்கி கௌரவிக்கிறார்.