தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நிறைவான கதையைக் கொண்ட படத்திற்கு ஒரு குப்பைக் கதை எனப் பெயரிட்டு படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி.
இந்த உலகத்தில் தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது. அப்படி தவறு செய்பவர்களை மன்னிப்பதைத் தவிர அவர்களுக்கு சிறந்த தண்டனை எதுவும் இல்லை என்பதைச் சொல்லும் படம்.
சென்னையில் குப்பை அள்ளும் வேலையைச் செய்பவர் தினேஷ். அவருடைய வேலை என்ன என்பதை மறைத்துவிட்டு அவருக்கு மலைப் பிரதேசமான வால்பாறையைச் சேர்ந்த மனிஷாவைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். குளுகுளு பிரதேசத்தில் இருந்தவர் குப்பை மேட்டிற்கு வந்து வசிக்கும் சூழல் உருவாகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் கணவன் குப்பை அள்ளுபவன் என்ற உண்மையும் தெரிந்துவிட கோபித்துக் கொள்கிறார். தாய்மை அடைந்திருப்பதாலும், அப்பாவின் கண்டிப்பாலும் தொடர்ந்து கணவருடன் வாழ்கிறார்.
மனைவிக்காக வசதியான பிளாட் ஒன்றிற்குச் செல்கிறார் தினேஷ். எதிர் பிளாட்டில் இருக்கும் பணக்கார இளைஞர் சுஜோ மாத்யூவுடன் மனிஷாவுக்கு நெருக்கமான பழக்கம் ஏற்படுகிறது. ஒரு நாள் திடீரென குழந்தையுடன், சுஜோ மாத்யூவுடன் கணவருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடுகிறார். மனைவியைத் தேடிக் கிடைக்காத தினேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். சில மாதங்களுக்குப் பிறகு மனைவி இருக்கும் இடம் தெரிய வர மனைவியைத் தேடிச் செல்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நடன இயக்குனராக இருக்கும் தினேஷ் கதையின் நாயகனாக அவ்வளவு பொருத்தமாக நடித்திருக்கிறார். ஏழ்மை இருக்கும் இடத்தில் உயரிய குணம் இருக்கும் என்ற கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். அவரைப் போல குணம் கொண்ட ஒரு கணவரை இந்தக் காலத்தில் தேடினாலும் கிடைக்காது.
மனிஷா, ‘வழக்கு எண் 18/9’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் ஒரு நிறைவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கணவனை கட்டி வைத்துவிட்டார்கள் என அந்த ஆற்றாமையை வெளிப்படுத்துவதில் அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார். குளுகுளு பிரதேசத்தில் இருந்து கூவக் கரையில் குப்பை மேட்டிற்கு வருகையில் அதைச் சுற்றிப் பார்க்கும் போது அவர் மனம் என்ன நினைக்கிறது என்பதை முகத்திலேயே வெளிக்காட்டி விடுகிறார். ஒரு சிறந்த நடிகையை தமிழ் சினிமா இவ்வளவு காலமும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறது.
தினேஷின் அம்மா ஆதிரா, பாட்டி கஸ்தூரி, மனிஷாவின் அப்பா ஜார்ஜ், அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்படும் சுஜோ மாத்யூ என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவர்களது நடிப்பை வெளிப்படுத்த சரியான காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் இயக்குனருக்கு பக்கபலமாய் இருந்திருக்கிறார்கள்.
பெரிய படங்கள், பெரிய நடிகர்கள் என வரும் சில குப்பைப் படங்களுக்கு மத்தியில் மாணிக்கமாய் மின்னுகிறது ‘ஒரு குப்பைக் கதை’ .