தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்கள் என்றால் சுமாரான வசூலைப் பெற்று தப்பித்து விடலாம் என்பதற்காக எடுப்பார்கள். ஆனாலும், அதில் கதை என்பது கொஞ்சமாவது இருந்தால்தானே சிரிப்பதோடு ரசிக்கவும் முடியும்.
இயக்குனர் பாண்டிராஜ் தயாரித்திருக்கும் படம் என்ற நம்பிக்கையில் படம் பார்க்கச் சென்றால் செமயாக ஏமாற்றிவிட்டார்கள்.
சீசனுக்கேற்றபடி குட்டி யானையில் காய்கறி, மீன், பழங்கள் என விற்கும் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு திருமணத்திற்காக பெண்களே அமையவில்லை. மன்சூரலிகான், கோவை சரளா தம்பதியினரின் மகளான அர்த்தனாவைப் பெண் பார்க்கச் சென்று அங்கு பெண் தர சம்மதிக்கிறார்கள். பூ வைக்கப் போகும் நாளன்று, இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என மன்சூரலிகான் சொல்லிவிடுகிறார். எம்எல்ஏ மகன் அவரது மகளைக் காதலிப்பதாகச் சொல்லவே, பெரிய இடம் என அதற்கு சம்மதிக்கிறார் மன்சூர். இருப்பினும் ஜி.வி.பிரகாஷ் மீது காதலுடன் இருக்கும் அர்த்தனா, அம்மா கோவை சரளா, ஜிவி பிரகாஷ் அம்மா சுஜாதா ஏற்பாட்டின்படி சென்னையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுகிறார். அந்த கல்யாண விஷம், அப்பா மன்சூருக்குத் தெரிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்திலும் பொருத்தமாகவே இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். காமெடியும் அவருக்கு சுலபமாகவே வருகிறது. ஆனால், படத்தில் நடிப்பை வெளிப்படுத்த என்று ஒரு காட்சியும் இல்லை.
அர்த்தனா அழகாக இருக்கிறார், சிரிக்கிறார், கொஞ்சமாக நடிக்கிறார். பிரகாஷ் மீது காதல் கொள்வதைத் தவிர அவருக்கு பெரிய வேலையில்லை.
யோகி பாபு தனி காமெடியனாக சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சில காட்சிகளில் மட்டும் கமெண்ட்டுகள் சிரிப்பை வரவைக்கின்றன. தனக்கென தனி டீம் அமைத்துக் கொண்டால் முன்னேறலாம்.
மன்சூரலிகான், கோவை சரளா, சுஜாதா சாதாரணமாக நடிக்கச் சொன்னாலே நடித்துத் தள்ளிவிடுவார்கள். வில்லன் ஜனாவுக்கு துளி கூட வேலையில்லை.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘சண்டாளி…’ பாடல் மட்டும் ஓ.கே. இப்படியே நடித்துக் கொண்டு போனால் நல்ல இசையை மறந்துவிடுவார் போலிருக்கிறது.
காமெடி படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அதற்கான காட்சிகள் படத்தில் இல்லை. இப்படிப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டே போனால், ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இசையமைக்க மட்டுமே முடியும்.