ஜுங்கா – விமர்சனம்

படத்தின் தலைப்பைப் பார்த்ததுமே ‘அது என்ன ஜுங்கா ?’ என்பதே இது ஒரு நகைச்சுவைப் படம் என்பதைப் புரிய வைத்துவிடும்.

தனக்கென ஒரு வட்டத்தை வைத்துக் கொள்ளாமல் படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் முயற்சி செய்து பார்ப்பவர் விஜய் சேதுபதி. அந்த வரிசையில் அவருடைய வித்தியாசமான முயற்சிதான் இந்த ‘ஜுங்கா’.

கதை என்ன என்றெல்லாம் பெரிதாக யோசிக்க வேண்டியதில்லை. தான் ஒரு டான் வாரிசு என்பதே தெரியாமல் வளர்ந்த விஜய் சேதுபதி, அந்த உண்மை தெரிய வந்ததும், டான் ஆக மாறிவிடுகிறார். அவர்களது குடும்ப சொத்தான தியேட்டரை மீட்கத்தான் அந்த டான் மாற்றம். பின்னர் மோதல், காதல், கடத்தல் என கலகலப்பான ஏரியாவிலேயே விளையாடும் டான் விஜய் சேதுபதி தியேட்டரை மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படத்தை ஒரு ‘ஸ்பூப்’ படமாகக் கொடுப்பதா அல்லது நகைச்சுவைப் படமாகக் கொடுப்பதா என இயக்குனர் கோகுல் கொஞ்சம் குழம்பிப் போய்விட்டார். ‘ஜுங்கா’ செய்வதையே கிண்டலடிக்க படத்தில் பல இடங்கள் உண்டு. அவருடைய ஒட்டு மீசை, தோற்றம், கத்திப் பேசுவது என அதையெல்லாம் தாராளமாகக் குறை சொல்லலாம்.

இருந்தும் தங்களைப் பற்றி கண்டு கொள்ளாமல் சில திரைப்படங்களையும், திரைப்படப் பெயர்களையும், நிஜப் பெயர்களையும் கிண்டலடித்திருக்கிறார்கள்.

எந்த கதாபாத்திரமோ அதில் ‘பிட்’ ஆகிவிடுபவர் விஜய் சேதுபதி. இந்தப் படத்திற்காக அவருடைய தோற்றத்திற்கு அதிகம் மெனக்கெடவில்லை என்பது வருத்தமே. ஒட்டு மீசை, கண்களில் மை (?), கொஞ்சம் நீளமான ஸ்டைலான முடி என குறையைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு கவனக் குறைவாக இருக்கிறார். ஆனாலும், சில காட்சிகளிலும், சில வசனங்களிலும் விஜய் சேதுபதித்தனம் அழுத்தமாகப் பதிந்துள்ளது.

சாயிஷா, இடைவேளை சமயத்தில்தான் ‘என்ட்ரி’ கொடுக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி கதாபாத்திரம். சிரிப்பிலும், நடனத்திலும் ரசிகர்களைக் கவரும் சாயிஷா விரைவில் நடிப்பிலும் கவர்வார் என எதிர்பார்ப்போம்.

யோகி பாபு நாளுக்கு நாள் நகைச்சுவை நடிப்பில் தெறிக்க விடுகிறார். அடுத்த வடிவேலு, சந்தானம் இடத்தை சேர்ந்தே நிரப்பி விடுவார் போலிருக்கிறது. அவரையும் இடைவேளைக்குப் பிறகு படத்தில் குறைத்துவிட்டார்கள்.

டான் அம்மா சரண்யா, டான் பாட்டி விஜியா பாட்டி இருவருமே நடிப்பில் அசத்தலோ அசத்தல். போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். கண்டக்டர் விஜய் சேதுபதியின் காதலியாக மடோனா. படத்திற்குத் தேவை இல்லை என்றாலும் அந்தக் குறும்புக் காதல் ரசிக்க வைக்கிறது.

வில்லனுக்கு சீரியசான காட்சிகள் இல்லை, ஆனாலும், சுரேஷ் மேனனின் அந்த உயரமும், தோற்றமும் வில்லத்தனத்தை எளிதாக வெளிப்படுத்துகிறது. முழுமையான கதாபாத்திரம் கிடைத்தால் அசத்துவாரோ, என்னமோ ?.

சித்தார்த் விபின் பின்னணி இசையில் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் செலுத்தியிருக்கலாம். வெளிநாட்டில் எங்கு காமிராவை வைத்தாலும் நம் கண்களுக்கு அழகாகவே தெரியும். இதில் பாரிஸின் அழகை கூடுதலாகப் பதிய வைக்கிறார் ஒளிப்பதிவாளர் டட்லி.

படத்தின் நீளத்தை, அதிலும் குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு குறைத்திருக்கலாம். ஆல் ஏரியாவிலும் நகைச்சுவையில் பட்டையைக் கிளப்ப வாய்ப்பிருந்தாலும் இறங்கி அடிக்காமல் விட்டிருக்கிறார்கள். இறங்கி அடித்திருந்தால் இந்த ஆண்டின் முக்கிய படமாக இந்த ‘ஜுங்கா’ இருந்திருக்கும்.

Read Previous

சாம் இசையில் யுவன் பாடிய பாடல்

Read Next

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ – டிரைலர் 2